📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 06, 2026 09:01 AM

தமிழ்... சமஸ்கிருதம்... பரதநாட்டியம்! ஆரோவில் ஸ்ரீ வாசவி பள்ளியில் கோலாகலமான

தமிழ்... சமஸ்கிருதம்... பரதநாட்டியம்! ஆரோவில் ஸ்ரீ வாசவி பள்ளியில் கோலாகலமான

தமிழ்... சமஸ்கிருதம்... பரதநாட்டியம்! ஆரோவில் ஸ்ரீ வாசவி பள்ளியில் கோலாகலமான ஆசிரியர் தின விழா!

புதுச்சேரி ஆரோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் இந்தியாவின் மொழி மற்றும் கலாச்சார மரபுகளைப் போற்றும் வகையில் தேசிய ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

விழுப்புரம் : ஆரோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் இந்தியாவின் மொழி மற்றும் கலாச்சார மரபுகளைப் போற்றும் வகையில் தேசிய ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மொழி மரபு, பாரம்பரிய கலை மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், தலைசிறந்த சமஸ்கிருத மற்றும் தமிழ் அறிஞர் டாக்டர் ராஜலட்சுமி சீனிவாசன் மற்றும் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் கிருபா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பகவத் கீதையை பாராயணம் செய்த மாணவர்கள்

விழாவின் தொடக்கமாக பள்ளி மாணவர்கள் பகவத் கீதையின் 12-வது அத்தியாயமான பக்தி யோகத்தை சமஸ்கிருதத்தில் பிழையின்றி, பக்திப்பூர்வமாக பாராயணம் செய்தனர்.

மாணவர்களின் தெளிவான உச்சரிப்பும், ஒருங்கிணைந்த பாராயணமும் விழாவிற்கு ஆன்மிகத் தன்மையை ஏற்படுத்தியதுடன், ஆசிரியர்–மாணவர் இடையேயான புனிதமான உறவையும் எடுத்துக்காட்டியது.

தமிழ் - சமஸ்கிருதம் இரட்டைக் குழந்தைகள்

தொடர்ந்து பேசிய டாக்டர் ராஜலட்சுமி சீனிவாசன், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைகளை தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மொழிபெயர்த்த அனுபவங்களையும் அவர் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தை “இரட்டைக் குழந்தைகள்” என வர்ணித்த அவர், இரு மொழிகளும் இந்தியாவின் வளமான கலாச்சார மரபில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

சமஸ்கிருத மொழியில் உச்சரிப்புத் துல்லியத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிய அவர், சரியான ஒலி உச்சரிப்பு மன ஒருமுகப்பாட்டையும் மொழித்திறனையும் மேம்படுத்தும் என குறிப்பிட்டார்.

பரதநாட்டியத்தில் அசத்திய கிருபா ரவி

இதனைத் தொடர்ந்து பரதநாட்டியக் கலைஞர் கிருபா ரவி, மாணவர்களுக்கு ‘அபிநயம்’ குறித்த விளக்கத்துடன் பரதநாட்டியத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

முகபாவனை, கண்களின் அசைவு மற்றும் கை முத்திரைகள் மூலம் வார்த்தைகள் இன்றியே பல்வேறு உணர்வுகளையும் கதைகளையும் வெளிப்படுத்த முடியும் என்பதை நடனத்தின் மூலம் அவர் செய்து காட்டினார்.

மேலும், நடராஜப் பெருமானைப் போற்றும் “ஆங்கிகம் புவனம் யஸ்ய” என்ற சமஸ்கிருத ஸ்லோகத்திற்கு பரதநாட்டியம் ஆடி, உடல் அசைவுகள் மற்றும் பாவனைகள் மூலம் ஆன்மிக உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்த முடியும் என்பதையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பாரம்பரிய கலைகள் மற்றும் இந்திய மொழிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

கல்வியுடன் கலாச்சாரத்தை இணைத்த விழா

ஸ்ரீ வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் தின விழா, ஆசிரியர்களை கௌரவிப்பதோடு மட்டுமின்றி, இந்திய மொழிகள், பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

தமிழ், சமஸ்கிருதம், பகவத் கீதை மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றின் சங்கமமாக நடைபெற்ற இந்த விழா, மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி