பாண்டிங், கோலி, தோனி.. கிரிக்கெட் வரலாற்றின் நம்பர் 1 கேப்டன் யார்? ராகுல் டிராவிட் ஆச்சரிய பதில்
பாண்டிங், கோலி, தோனி.. கிரிக்கெட் வரலாற்றின் நம்பர் 1 கேப்டன் யார்? ராகுல் டிராவிட் ஆச்சரிய பதில்
மும்பை: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு, உலகின் பல சிறந்த முன்னாள் கேப்டன்களைப் பின்னுக்குத் தள்ளி தோனியே மிகச்சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தேர்வு செய்துள்ளார்.
பிரபல விளையாட்டு இணையதளம் நடத்திய இந்த சுவாரசியமான நேர்காணலில், இரு கேப்டன்களில் ஒருவரைத் தேர்வு செய்யும் சவால் டிராவிட்டிற்கு வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை, பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன், ஸ்டீபன் பிளெமிங், இயான் மோர்கன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரை விட சிறந்தவராக டிராவிட் தேர்ந்தெடுத்தார்.
அடுத்த சுற்றில், ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையே பாண்டிங்கையும், பின்னர் ரிக்கி பாண்டிங்கை விட ஸ்டீவ் வாவையும் டிராவிட் தேர்வு செய்தார். தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் உடற்தகுதி மற்றும் வேகப்பந்து வீச்சில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய விராட் கோலியை, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாவை விட சிறந்த கேப்டனாக டிராவிட் தேர்வு செய்தார்.
எனினும், விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் இடையேயான தேர்வில், 1992 உலகக் கோப்பையை வென்று கொடுத்த இம்ரான் கானை டிராவிட் தேர்வு செய்தார். ஆனால் இறுதிக் கட்டத்தில், வெஸ்ட் இண்டீஸின் 2 முறை உலகக் கோப்பை வென்ற கிளைவ் லாயிட் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி, தோனியே உலகின் தலைசிறந்த கேப்டன் என டிராவிட் தேர்வு செய்தார்.
2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முக்கிய ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக திகழும் தோனியை டிராவிட் தேர்வு செய்துள்ளார். தோனியின் கேப்டன்சிக்கு ராகுல் டிராவிட் அளித்துள்ள இந்த அங்கீகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.