📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 10:03 PM

ஓய்வு பெற்றவர்களை நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: பருவகால பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

ஓய்வு பெற்றவர்களை நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: பருவகால பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

ஓய்வு பெற்றவர்களை நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: பருவகால பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

சென்னை: சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பருவகால பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் தினந்தோறும் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வரிசையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒருங்கிணைந்த பருவகால பணியாளர்கள் சங்கத்தினரும் தற்போது இணைந்துள்ளனர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சுமார் 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பருவகால பணியாளர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை என்பது அவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, நீண்டகாலமாக பணியாற்றி வரும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு அனைத்து பருவகால பணியாளர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், காலியாக உள்ள 2,200 பணியிடங்களை உடனடியாக நிரப்பி, அதன் மூலம் பணியில் உள்ள ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வைப்பு தொகையாக பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.440 தினக்கூலியாக வழங்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு பதிலாக, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பருவகால பணியாளர்களுக்கே அந்தப் பணியிடங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவகால பணியாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 32 மாவட்டங்களைச் சேர்ந்த பருவகால பணியாளர்கள் இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒருங்கிணைந்த பருவகால பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சங்கத்தின் நிர்வாகிகள் துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து காத்திருப்பு போராட்டம் மேலும் நீடிக்குமா அல்லது நிறைவடையுமா என்பது தெரியவரும்.

பொதுவாக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரும் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது, பல்வேறு துறைகளில் நிலவி வரும் பிரச்சினைகளின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.