நீ அடிச்சது யாரை தெரியுமா? டிஜிபி பா.. சண்டக்கோழி போல் சிராஜ் ஓவரில் சீறிய வைபவ் சூர்யவன்ஷி
நீ அடிச்சது யாரை தெரியுமா? டிஜிபி பா.. சண்டக்கோழி போல் சிராஜ் ஓவரில் சீறிய வைபவ் சூர்யவன்ஷி
சென்னை: துலீப் டிராபி இறுதிப் போட்டியின் முதல் நாளில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை சேப்பாக்கம் டிமதானத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சை சிதறடித்த அவர், ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இறுதியாக 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
சவுத் ஜோன் அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில், மூத்த வீரர் அபிமன்யு ஈஸ்வரனுடன் இணைந்து சூர்யவன்ஷி இன்னிங்ஸைத் தொடங்கினார். கடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளைப் போலவே, இந்த ஜோடி தொடக்கத்திலிருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை அளித்தது.
ஆட்டத்தின் 7-வது ஓவரில் சூர்யவன்ஷி ரன் குவிப்பில் வேகம் காட்டினார். சிராஜ் வீசிய அந்த ஓவரின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். சிராஜ் வீசிய லென்த் பந்தை சூர்யவன்ஷி மிட்-ஆஃப் திசைக்கு மேல் தூக்கி அடித்து அசத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிராஜ், தனது பந்துவீச்சு முறையை மாற்றி வீசினாலும், மீண்டும் சூர்யவன்ஷி அதே போன்ற ஒரு ஷாட்டின் மூலம் பவுண்டரி அடித்தார்.
முன்னதாக, சிராஜ் வீசிய பந்தை பாயிண்ட் திசையில் தட்டிவிட்டு பவுண்டரிக்கு அனுப்பிய சூர்யவன்ஷி, அடுத்த பந்திலேயே நேராக மைதானத்திற்கு வெளியே பறக்கும்படி ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை விளாசினார். இதனால் அந்த ஓவரில் மட்டும் சூர்யவன்ஷி பவுண்டரிகளையும் சிக்ஸரையும் பறக்கவிட்டார்.
இலங்கைத் தொடருக்குப் பிறகு இங்கு விளையாடும் முகமது சிராஜ், தனது வழக்கமான வேகத்திலும் துல்லியத்திலும் தடுமாறினார். அவர் வீசிய 5 ஓவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 41 ரன்களை வாரி வழங்கினார். இதனால் சவுத் ஜோன் அணியின் கேப்டன் திலக் வர்மா விரைவாகவே சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
இருப்பினும், சூர்யவன்ஷியின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளரான சாமா மிலிந்த் கைப்பற்றினார். ஆட்டத்தின் 15-வது ஓவரில் மிலிந்த் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை சூர்யவன்ஷி சிக்ஸருக்கு அடிக்க முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த தனய் தியாகராஜனிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.