📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 07:10 PM

நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். 'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், மக்கள் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை அரிசி மாவு கரைசலால் குழந்தையின் பாதங்களை பதித்து, ஸ்ரீகிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள். இந்த இனிய நாளில் நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒருமுறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.