📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 06:03 AM

நாளை முடிகிறது இடைத்தேர்தல் பிரசாரம்; தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ

நாளை முடிகிறது இடைத்தேர்தல் பிரசாரம்; தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில், நாளை (அக்., 04) மாலை 6:00 மணியுடன் பிரசாரம் முடிகிறது. தாராபுரத்தில் நாளை, முதல்வர் விஜய், சாலைகளில் வலம் வந்து, ஆதரவு திரட்டுகிறார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், வரும், 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மாலை 6:00 மணியுடன் முடிகிறது. கடந்த மாதம், 25ம் தேதி, மதுராந்தகத்தில் பிரசாரம் செய்த த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய், நேற்று, மாமண்டூரில் இருந்து மதுராந்தகம் வரை, 45 கி.மீ., துாரம், கிராமம் கிராமமாக சென்று, 'ரோடு ஷோ' நடத்தினார்.

டீக்கடையில் டீ குடித்தும், வயலில் டிராக்டர் ஓட்டியும், அவர் ஆதரவு திரட்டினார். கடந்த, 30ம் தேதி, தாராபுரத்தில் பிரசாரம் செய்த தமிழக முதல்வர் விஜய், இரண்டாவது முறையாக, நாளை அங்கு பிரசாரம் செய்கிறார். மதுராந்தகம் போல, கிராமம் கிராமமாக, 'ரோடு ஷோ' நடத்த இருப்பதாக த.வெ.க., அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வெளியிட்ட அறிக்கை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், வரும், 6ம் தேதி காலை 7:00 முதல், மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். நாளை மாலை 6:00 மணி முதல், ஓட்டுப் பதிவு முடியும் வரை, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலங்களை யாரும் நடத்தக்கூடாது.

திரைப்படம், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் வாயிலாக, எந்த வகையிலும் பிரசாரம் செய்யக்கூடாது. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், எந்தவோர் இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வாயிலாக பிரசாரம் செய்யக்கூடாது.

இதை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இருந்து, வெளியூர் நபர்கள் நாளை மாலை 6:00 மணிக்குள், வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்களில், வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.