அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?
அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?
இடைவேளையை ஒட்டிய வாக்குவாதத்தில், ஒருவர் பேசி முடிப்பதற்குள் மற்றொருவர் குறுக்கிடுவது வரை நிஜமான தம்பதிகளின் சண்டையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே காட்சிகள் வருவது சிறப்பு!
அன்பையும் அக்கறையையும் மிகையின்றி வெளிப்படுத்தும் ‘கிரீன் ஃபிளாக்’ கணவராக அசோக் செல்வன் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, இடைவேளையை ஒட்டிய மனைவியுடனான வாக்குவாதத்தில் அவரது நிதானமான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இரண்டாம் பாதியின் ஆக்ஷன் காட்சிகளிலும் உடலுழைப்பைக் கொட்டியிருக்கிறார். காதல், கோபம், துணிச்சல் என இயலின் வெவ்வேறு மனநிலைகளை நன்றாக வெளிப்படுத்துகிறார் ப்ரீத்தி முகுந்தன். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தின் முக்கிய பலம். கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ், சபுமோன் உள்ளிட்டோர் வில்லத்தனத்துக்குத் தேவையான மிரட்டலைக் கொடுத்தாலும், அவர்களின் கதாபாத்திரங்கள் பழக்கப்பட்ட வார்ப்புகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன.
கோவிந்த் வசந்தாவின் இசை, காதல் காட்சிகளுக்கு மென்மையையும் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பரபரப்பையும் சேர்க்கிறது. கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் இந்த இரு பகுதிகளின் வெவ்வேறு ட்ரீட்மென்ட்டுகளுக்குத் துணை நிற்கிறது. ஆனால், காட்சிகளின் நீளத்தைக் கட்டுப்படுத்துவதில் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. இன்னும் கறாராக இருந்திருக்கலாம். இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமான படத்தின் நீளம், குறிப்பாகப் பின்பாதியில் பெரும் சுமையாகிறது.
பல ஆண்டுகளாக வீட்டை விற்க மறுக்கும் ராணி மனம் மாறுவது சரி. ஆனால், எம்.எல்.ஏ.வின் எதிர்ப்பைப் பற்றிப் போதுமான எச்சரிக்கையைக் கொடுக்காமல் அவர் விலகுவது நெருடல். எம்.எல்.ஏ., வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி எனப் பதவிகள் மாறினாலும், வில்லத்தனம் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறது. இவர்களால் ஏற்படும் தடங்கல்களிலும் புதுமையோ பதற்றமோ இல்லை. காதலுக்கு அளித்த கவனத்தை மோதல்களுக்கும் கொடுத்திருந்தால், இந்தத் தம்பதியின் போராட்டத்தில் நம்மால் ஒன்றியிருக்க முடியும். இங்கே காட்சிகள் அனைத்துமே அடுத்தடுத்த பிரச்னைக்கான ஏற்பாடுகளாகவே தெரிகின்றன.
இரண்டாம் பாதியில், இந்தக் காதல் படம் முழுமையான சர்வைவல் ஆக்ஷன் த்ரில்லராக மாறுகிறது. மனைவிக்காக எதையும் செய்யத் துணிபவர் சூர்யா என்பது நிறுவப்பட்டிருந்தாலும், அவரை ‘ஒன் மேன் ஆர்மி’யாக மாற்றுவது ஏற்றுக்கொள்ளும்படி அமையவில்லை. ஆரம்பத்தில் சாகசங்களை விரும்புபவராகக் காட்டியிருப்பது மட்டுமே, ஒரு பெரிய கும்பலை அவர் தனியாக எதிர்கொள்கிறார் என்பதை நம்ப வைக்கப் போதுமானதா?
குறிப்பாக, நீண்ட க்ளைமாக்ஸ் சண்டையில் அடி, உதை, கத்தி குத்து என ஆக்ஷன் தொடர்ந்துகொண்டே இருப்பதால், இவர்களுக்கு என்ன ஆகுமோ என்கிற பதற்றத்தைவிடக் காட்சியின் நீளமே அதிகம் உணரப்படுகிறது. பீட்டர் ஹெய்னின் ஸ்டண்ட்ஸில் கடும் உழைப்பு தெரிகிறது. ஆனால், அந்த உழைப்புக்கு இணையான சுவாரஸ்யத்துடன் சண்டைக் காட்சிகள் அமைந்திருந்தால், சூர்யாவின் போராட்டம் நம்மையும் பதற்றத்துடன் பார்க்க வைத்திருக்கும்.