முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தவரின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: உயர்நீதிமன்றம்!
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தவரின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: உயர்நீதிமன்றம்!
சென்னை: முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய ஆர். சமன் என்பவர் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மனைவியான தமிழரசி குடும்ப ஓய்வூதியம் கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.
சமன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் தமிழரசியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதால், தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என தமிழக அரசு மறுத்தது.
இதை எதிர்த்து தமிழரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசாமி அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கில், சமன் தனது முதல் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்திருந்தாலும், சட்டப்படி விவாகரத்து பெற்றதற்கான ஆவணங்கள் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். வெறுமனே பிரிந்து வாழ்வதை சட்டப்படி விவாகரத்தாகக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதன் அடிப்படையில், சமன் மற்றும் தமிழரசி இடையிலான இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லத்தக்க திருமணமாகக் கருத முடியாது என்பதால், குடும்ப ஓய்வூதியம் கோர தமிழரசிக்கு உரிமை இல்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், சட்டப்படி திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றவரின் மனைவியையே விதவையாகக் கருத முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான தமிழரசிக்கு ஏற்கனவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.