"முகத்தை மூடிட்டு போகணும் ஆனா ஊரே திரண்டு வந்து..".. ஆத்திரமடைந்த வாசிம் அக்ரம்.. ரசாவுல்லா சர்ச்சை
"முகத்தை மூடிட்டு போகணும் ஆனா ஊரே திரண்டு வந்து..".. ஆத்திரமடைந்த வாசிம் அக்ரம்.. ரசாவுல்லா சர்ச்சை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் நாடு திரும்பிய இளம் வீரர் ஒருவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டு அடுத்த வக்கார் யூனிஸ் என பலரும் கொண்டாடி உள்ளனர். அதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் வாசிம் அக்ரம்.
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 194 ரன்கள் வித்தியாசத்திலும், கடைசிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. தொடரின் பாதியிலேயே 7 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்தத் தொடரின் 3-வது போட்டியில் அறிமுகமான 21 வயது வேகப்பந்து வீச்சாளர் ரசாவுல்லா, தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் விக்கெட் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கி 63 பந்துகளில் 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசி மிரட்டினார். 9-வது விக்கெட்டுக்கு முகமது அப்பாஸுடன் இணைந்து 121 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து அவரை 'அடுத்த வக்கார் யூனிஸ்' என பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர். ஒட்டுமொத்த அணியும் படுதோல்வி அடைந்த நிலையில், பாகிஸ்தான் திரும்பிய ரசாவுல்லாவுக்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு, மாலை அணிவித்து உலகக் கோப்பையை வென்றது போல உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தக் கொண்டாட்டத்தைக் கண்டு முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் உச்சக்கட்ட ஆத்திரமடைந்தார். வக்கார் யூனிஸ் அருகில் அமர்ந்திருக்க பேசிய அக்ரம், "இங்கிலாந்திடம் அடி வாங்கி படுதோல்வி அடைந்துவிட்டு வரும்போது முகத்தை மூடிக்கொண்டு தலைகுனிந்து வீட்டிற்குள் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஊரே திரண்டு வந்து விமான நிலையத்தில் மாலை போட்டு கொண்டாடுவதா? நாம் தோல்வியையும் மோசமான ஆட்டத்தையும் சாதாரணமாகக் கொண்டாடப் பழகிவிட்டோம் என்பதையே இந்த மனநிலை காட்டுகிறது" என்று காட்டமாக விமர்சித்தார்.