மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு விழா நிறைவு
மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப்பிறகு வியாழக்கிழமை (செப்டம்பர் 17) காலை மணி 7.40 முதல் 8.10 வரை (இந்திய நேரப்படி) கோலாகலமாக நடைபெற்றது.
காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12ஆம் கால யாக வேள்வி நடைபெற்றது.
பின்பு கலசங்கள் புறப்பட்டு காலை மணி 7.40க்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சன்னிதிகளின் தங்க விமானங்கள், ராஜகோபுரக் கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
காலை மணி 7.55க்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும் காலை மணி 8.10க்கு மூலவர் சுந்தரேசுவரருக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கில் சமூகத் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 11,000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். கோயிலின் மேல்தளத்தில் மட்டும் 9,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டனர்.
விழாவில் பல்வேறு மடங்களின் ஆதீனங்கள், அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், உயர் கல்வி அமைச்சர் பெ.விஸ்வநாதன் முதலியோர் பங்கேற்றனர்.
மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 காவல்துறை அதிகாரிகள் மூன்றடுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களுக்கு அவசரச் சிகிச்சை அளிக்க 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள், 12 அவசர உதவி வாகனங்களுடன் 70 மருத்துவர்கள், 150 துணை மருத்துவ ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ராஜாஜி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருந்தன.
பக்தர்கள் நெரிசலின்றிக் குடமுழுக்கைக் காணும் வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், முக்கிய வீதிகளில் 51 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டன.
அனைத்துத் துறைப் பணிகளையும் ஒருங்கிணைக்கப் புது மண்டபத்தில் சிறப்பு ஆணை, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமையான வரலாற்றைக் கொண்டது. அக்கோயில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமன்றி, தமிழ்மொழி, சங்கம், கலை, பண்பாட்டின் தொன்மையான மையப் புள்ளியாகத் திகழ்கிறது.