அமைச்சர் நிர்மல்குமார் மீது டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை உதாசீனப்படுத்தியதாக, டி.ஜி.பி., அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் மீது, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா புகார் அளித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: என் கட்சியின் தலைவர் அசிங்கப்படுத்தப்படுகிறார். அவரது தியாகத்தை சிலர் உதாசீனப்படுத்தி கொச்சைப்படுத்துகின்றனர்.
இதனால், தி.மு.க., தொண்டர்கள் வேதனையடைந்து பொங்கி எழுகின்றனர்; கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
எனவே, அமைச்சர் நிர்மல்குமார் இதுபோன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக் கூடாது. மக்களை துாண்டுகிற, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதற்கு வழக்கு தொடுக்க வேண்டும். தி.மு.க.,வினரின் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஆனால், சமூக வலைதளத்தில் பதிவு செய்தால் வழக்கு என, தி.மு.க.,வினரை மட்டும் குறிவைக்கின்றனர். ஆளுங் கட்சியினர் மீதான புகாரில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
வரலாற்று நிகழ்வை கொச்சைப்படுத்துவதை, அமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.