📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 11, 2026 05:03 AM

மரண தண்டனையை ஒரு காட்சிப் பொருளாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: கர்தினால் பரோலின்

மரண தண்டனையை ஒரு காட்சிப் பொருளாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: கர்தினால் பரோலின்

மரண தண்டனையை ஒரு காட்சிப் பொருளாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: கர்தினால் பரோலின்

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அமெரிக்காவில், 2009ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் படுகொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ மேஜர் நிடால் ஹசன் என்பவருக்கு நிறைவேற்றப்படவுள்ள துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் மரண தண்டனையை நேரலையாக ஒளிபரப்பும் திட்டத்திற்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மரணத்தை ஒரு காட்சிப் பொருளாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ளியன்று, உரோம் நகரில் புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், மரண தண்டனையை நேரலையாக ஒளிபரப்புவதன் நோக்கம் குறித்துக் கேள்வி எழுப்பினார். குற்றவாளி எவ்வளவு குற்றம் செய்திருந்தாலும், நீதியை நிலைநாட்ட வேறு வழிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மரண தண்டனை மனித மாண்புக்கு முரணானது என்றும், குற்றங்களைத் தடுப்பதற்கும் அது உதவுவதில்லை என்றும் கூறிய அவர், கத்தோலிக்கத் திருஅவை மரண தண்டனைக்கு உறுதியாக எதிர்ப்பு தெரிவிப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் பால் கோக்லி அவர்கள் ஏற்கெனவே இவ்விவகாரம் குறித்துத் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இவ்விவகாரம் தொடர்பாகத் திருப்பீடமும் ஓர் அறிக்கையை வெளியிடும் என்று தெரிவித்தார்.

2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகப் பணியாற்றிய தென்னாப்பிரிக்க நீதிபதி நவநீதம் “நவி” பிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு குறித்துக் கேட்கப்பட்டபோது, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுப்பது ஒரு நேர்மறையான செயல்பாடு என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.