மம்தா தரப்புக்கு புதிய கட்சிப்பெயர், சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் கமிஷன்
- நமது நிருபர் -
மேற்கு வங்கத்தில் மம்தா தரப்புக்கு கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கி உள்ள தேர்தல் கமிஷன், ' மம்தா அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ் ' என்ற பெயரை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு குழுவினரும், அருப் ராய் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.
அதிருப்தி குழுவிவை சேர்ந்த ரிதப்ரதா பானர்ஜிக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதனிடையே திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை( இரட்டைப் பூக்கள்) தேர்தல் கமிஷன் முடக்கியது. பிரச்னை முடிவுக்கு வரும் வரை இரு பிரிவினரும் புதிய பெயர் மற்றும் சின்னங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், இரு பிரிவினருக்கும் தனித்தனியே, புதிய பெயர்களையும், சின்னங்களையும் தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.
இதன்படி மம்தா தலைமையிலான குழுவினரின் கட்சி பெயராக மம்தா அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ் என அறிவித்துள்ளதுடன், கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.
மேலும் அருப் ராய் தலைமையிலான குழுவுக்கு, ஜனநாயக திரிணமுல் காங்கிரஸ் பெயரும், அஞ்சல் உறை சின்னத்தையும் ஒதுக்கி உள்ளது.
இரு பிரிவினரையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ள தேர்தல் கமிஷன், மாநிலத்தில் விரைவில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் புதிய பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என இரு தரப்புக்கும் உத்தரவிட்டு உள்ளது.
இதனிடையே மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா தரப்பில் சஞ்சிதா தேவ் பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இன்று அவர் முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் அவர், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அந்தத் தொகுதியிலும், அசாமில் நடக்கும் இடைத்தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும், நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுத்து உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.