📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 06, 2026 04:02 PM

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: 21.37 ஏக்கர் நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்ற சிஎம்டிஏ ஒப்புதல்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: 21.37 ஏக்கர் நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்ற சிஎம்டிஏ ஒப்புதல்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: 21.37 ஏக்கர் நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்ற சிஎம்டிஏ ஒப்புதல்

தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டிற்கு மாற்ற பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 21 நாட்கள் கருத்துக் கேட்பு அவகாசம் முடிவடைந்தது.

Published : October 6, 2026 at 3:08 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகத்திற்காக, பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 21.37 ஏக்கர் நிலத்தை, குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிகப் பயன்பாட்டிற்கு மாற்ற சிஎம்டிஏ கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைய உள்ள நிலங்களில் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியும் (Enter-Upon Permission) பெறப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்து வழங்கவும், புதிய வளாகத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கவும் பொதுப்பணித்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலத்தின் ஒரு பகுதி குடியிருப்பு பயன்பாட்டிற்கான நிலமாகவும், ஒரு பகுதி நிறுவனப் பயன்பாட்டுக்கான இடமாகவும், மற்றொரு பகுதி திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கான நிலமாகவும் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்கான நில வகைப்பாட்டுக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

புதிய தலைமைச் செயலகத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் வகைப்பாட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிஎம்டிஏ மேற்கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக, பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிகப் பயன்பாட்டுக்கான நில வகைப்பாட்டுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக பொதுமக்களிடம் 21 நாட்கள் கருத்துக் கேட்பு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலத்தின் வகைப்பாட்டை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 21.37 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற சிஎம்டிஏ குழுமக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத் திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் வகைப்பாட்டை மாற்றுவதற்கு சிஎம்டிஏ குழுமக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர உள்ளன. மேலும், தேவையான பிற அனுமதிகள் பெறப்பட்ட பிறகு, புதிய தலைமைச் செயலகத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.