📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 09, 2026 11:00 PM

மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மதுரை: 'மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், சமஸ்கிருதத்துடன், தமிழ் மந்திரங்கள் ஓதுவார்களால் ஓதப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, மதுரை தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பாக, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு நேற்று விசாரித்தது.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், 'மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், சமஸ்கிருதத்துடன் சேர்த்து தமிழ் மந்திரங்களும் இடம்பெறும். 2009ல் கும்பாபிஷேகத்தின் போது தமிழ் ஓதுவார்கள் வேதபாராயணம் ஓதினர்.

அதுபோல் இம்முறை ஓதுவார்கள், பன்னிரு திருமுறைகளை ஓத ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே உள்ள நடைமுறை தற்போதும் பின்பற்றப்படும். இதுபோல் தாக்கலான மற்றொரு வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்' என்றார்.

இதை பதிவு செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கோவிலில் நீண்ட காலமாக பின்பற்றும் நடைமுறை, தற்போதைய கும்பாபிஷேகத்திலும் பின்பற்றப்படும் என இந்நீதிமன்றம் நம்புகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றனர்.