📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 15, 2026 11:03 AM

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு இன்று நிறுத்தம்: சம்பா சாகுபடி கேள்விக்குறி; விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு இன்று நிறுத்தம்: சம்பா சாகுபடி கேள்விக்குறி; விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு இன்று நிறுத்தம்: சம்பா சாகுபடி கேள்விக்குறி; விவசாயிகள் கவலை

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்றுடன் நீர்திறப்பு நிறுத்தப்படுகிறது. இதனால் நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. மேட்டூர் அணையில் நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. 90 அடியை தாண்டிய நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் 45 நாட்களுக்கு தான் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நீரை கொண்டு, டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கினர்.

தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், விவசாயிகள் இந்த ஆண்டு அதிகளவில் பாரம்பரிய நடவு முறையைத் தவிர்த்து, குறைந்த நீரைப் பயன்படுத்தும் நேரடி நெல் விதைப்பு முறைக்கு மாறினர். ஆனால், அணையில் இருந்து கடைமடை வரை நீர் சென்றடையவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இன்று (15ம் தேதி) மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 900 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 787 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 59.13 அடியானது. நீர் இருப்பு 24.04 டிஎம்சியாக உள்ளது. கடந்த 14 நாட்களில், அணையின் நீர்மட்டம் 17.87 அடி வரை சரிந்துள்ளது. நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாசனத்திற்கு நீர் திறப்பு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.

நீர் திறப்பு நிறுத்தப்பட இருப்பதால் டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையாவது கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மேட்டூர் அணை நீர், பாசனத்திற்கு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது அணையில் இருப்பு உள்ள நீரில் 9.60 டி.எம்.சி தண்ணீர் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் நீர்தேக்கத்தில் உள்ள மீன்களை பாதுகாக்கவும் வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்தாலும், மேட்டூர் அணைக்கு அதிகமாக நீர் வர வாய்ப்பு இல்லை. இதனால், அடுத்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.