பூந்தமல்லி இருந்து வடபழனி வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வியந்த சிறப்பு பள்ளி மாணவர்கள்
பூந்தமல்லி இருந்து வடபழனி வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வியந்த சிறப்பு பள்ளி மாணவர்கள்
சென்னை, அக்.15: பூந்தமல்லி மக்களின் நீண்ட நாள் கனவாகவும், எதிர்பார்ப்பாகவும் ஆவலாகவும் இருந்து வந்த மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்ததில் பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரையிலான இந்த புதிய மெட்ரோ ரயில் சேவை கடந்த அக்.11ம் தேதி பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து அன்றைய தினத்தில் இருந்து பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோவில் சென்று வருகின்றனர். பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் தேவைக்காகவும், பயண அனுபவத்திற்காக குடும்பம் குடும்பமாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பூந்தமல்லி நகர தவெக நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை மெட்ரோ ரயிலில் அழைத்துச் சென்றனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் அறிவுத்திறன் குறைபாடுடையோருக்கான தொன் குவனெல்லா சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் அழைத்து வந்தனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள லிப்ட், எஸ்கலேட்டர் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள நவீன வசதிகளை இந்த மாணவ மாணவிகள் வியந்து பார்த்தனர். கைதட்டி தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர்.
ரயிலில் பயணம் செய்த பொதுமக்களும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கைதட்டி வரவேற்றனர். ரயிலில் பயணித்த மாணவர்கள் காண்போம் கற்போம் என்ற கற்பித்தல் செயல்முறையில் சென்றதாகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினர்.