லிட்டில் இந்தியாவில் கோலாகல தீபாவளிக் கொண்டாட்டங்கள்
லிட்டில் இந்தியாவில் இவ்வாண்டிற்கான தீபாவளிக் கொண்டாட்டங்கள் வண்ணமயமான அலங்காரங்கள், பாரம்பரியத் தமிழ் இசை அங்கங்கள், கலைநயமிக்க நடனங்கள் ஆகியவற்றுடன் களைகட்டத் தொடங்கிவிட்டன. நவம்பர் 8ஆம் தேதி தீபாவளித் திருநாள். அதனை முன்னிட்டு சனிக்கிழமை (அக்டோபர் 3) லிட்டில் இந்தியாவின் பர்ச் ரோட்டில் இரவு 7 மணியிலிருந்து 'தீபாவளித் திருவிழா' ஒளியூட்டு நிகழ்ச்சி நடந்தேறியது.அலங்கார விளக்குகள் இரவு 7.45 மணிக்கு ஒளியூட்டப்பட்டன. நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். “இத்தகைய கொண்டாட்டங்கள்வழி நமது பாரம்பரியம் உயிர்ப்புடன் தழைக்கிறது. அவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து, பகிர்ந்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது முக்கியம்.வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் இணைந்து இத்தகைய கொண்டாட்டங்களில் பங்கேற்கும்போது நமது பாரம்பரியங்கள் வலுவடைகின்றன,” என்றார் அவர்.அவருடன் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, வெளியுறவு, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான், நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஒளி அலங்காரங்கள் இவ்வாண்டு சீதையை ராமர் இலங்கையிலிருந்து மீட்டுவந்த வெற்றியைக் கருப்பொருளாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்