📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 01:01 AM

‘குடும்பத்தின் ஆதரவு இல்லையெனில் சாதித்திருக்க முடியாது!’

‘குடும்பத்தின் ஆதரவு இல்லையெனில் சாதித்திருக்க முடியாது!’

கடந்த 1980 – 90களில் தமிழ் திரைப்படங்களில் பல, ‘ஹிட்’ பாடல்களை பாடிய, சென்னையில் வசிக்கும் பின்னணி பாடகி சுனந்தா:

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளா தான். அப்பாவுக்கு, சென்னைக்கு பணி மாறுதல் கிடைத்ததால், இங்கு வந்தோம். குயின் மேரிஸ் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த போது, இளையராஜாவின் இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது.

நான் சினிமா துறைக்கு வந்தபோது, என்ன தான் கஷ்டமான பாடலாக இருந்தாலும் அதை பாடி விடுவேன். ஆரம்பத்தில் எனக்கு தமிழ் தெரியாது.

அர்த்தம் தெரியாமலே பல பாடல்களை பாடி இருக்கிறேன். அந்த பாடல், திரைப்படத்தில் எந்த சூழ்நிலையில் வருகிறது என்றும் தெரியாமலேயே பாடி இருக்கிறேன்.

இப்போது அதையெல்லாம் யோசிக்கும்போது, தெரிந்திருந்தால் இன்னும் கூட சிறப்பாகப் பாடி இருக்கலாம் என்று தோன்றும்.

அதேபோல், நான் பாடிய பாடல்களை மறுபடியும் கேட்பதில்லை. திரும்ப கேட்கும்போது, அவற்றின் குறைகள் தான் முதலில் தெரியும் என்பதால் தவிர்த்து விடுவேன்.

அர்த்தம் தெரியாமலும், காட்சிகளின் பின்னணி புரியாமல் பாடினாலும், படத்தில் பார்க்கும்போது அது பொருத்தமாக இருப்பதாக பலரும் பாராட்டி இருக்கின்றனர்.

திருமணத்திற்குப் பின்னும் என் இசை பயணம் தொடர்வதற்கு, கணவர் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம். அதேபோல், பெற்றோர் கொடுத்த ஆதரவும் மறக்க முடியாதது.

என் சகோதரர்கள், தங்களுடைய வேலைகளில், ‘பிசி’யாக இருந்தாலும், ‘ரெக்கார்டிங்’ நடக்கும்போது என்னை அழைத்துச் செல்ல வந்துவிடுவர். கடவுளின் அருளும், குடும்பத்தின் ஆதரவும் இல்லையெனில், இந்த அளவு சாதித்திருக்க முடியாது.

நான் கொஞ்சம் தனிமை விரும்பி. எனக்கென்று இருக்கும் குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், உறவுகள், நட்பு வட்டத்தை தாண்டி எல்லாருடனும் பழகுவது இல்லை. சினிமா பாடல்கள் இல்லாமல், மற்ற பாடல்களை எல்லாம் பாடிக்கொண்டு தான் இருக்கிறேன்.