ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது இந்தியாவுக்கு கடினம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
நமது சிறப்பு நிருபர்
அமெரிக்கா - ஈரான் போரால், உலகளாவிய அளவில் எரிசக்தி வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பரில், அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், நாட்டின் நலன் கருதி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். அந்நாட்டுடன் அவர் ஒப்பந்தம் மேற்கொண்ட சில மணி நேரங்களிலேயே, ரஷ்யா மீதான தடைகள் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது, 100 சதவீத இறக்குமதி வரி விதிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் அதிபர் டிரம்ப் நிறைவேற்றினார்.
இந்த சூழலில், தன் சொந்த நாட்டின் நலனுக்காக ரஷ்யாவிடம் இருந்து, அமெரிக்கா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான், இந்தியாவுக்கு புறப்பட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:
உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் போர், சவுதி அரேபியா மீது ஹவுதி படைகள் நடத்தும் தாக்குதல்கள், அமெரிக்க - ஈரான் போரால் உலகளாவிய அளவில் எரிசக்தி வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்தியா போன்ற நாடுகள் எரிசக்தி தேவையை வேறு வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றன. இதனால், ஒரே இரவில் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி இறக்குமதியை நிறுத்துவது என்பது இந்தியாவுக்கு கடினமான செயல்.
ரஷ்யா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும், 'லின்ட்ஸி ஓ கிரஹாம்' சட்டத்தின் கீழ் தேசிய நலனை கருதி சில விலக்குகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா மீதான தடைகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீதான வரிகளால், அமெரிக்க பொருளாதாரத்தில் எந்தவிதமான தாக்கம் ஏற்படும் என்பதை ஆய்வு செய்ய அதிபர் டிரம்ப், 60 நாள் வரை அவகாசம் கோரியுள்ளார். அதற்காகவே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.