📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 03, 2026 11:03 AM

கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தைக் கண்டு ரசித்த புருணை இளவரசர்

கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தைக் கண்டு ரசித்த புருணை இளவரசர்

சிங்கப்பூர் வந்துள்ள புருணை இளவரசர் அல்-முஹ்ததி பில்லா, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தைச் சுற்றிப்பார்த்துச் சிங்கப்பூருக்கான தமது ஐந்து நாள் அதிகாரபூர்வப் பயணத்தை நிறைவு செய்தார்.

இதற்கு முந்திய நாள் கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தை அவர் பார்வையிட்டார்.

அங்குப் பிரதமர் லாரன்ஸ் வோங், அவருக்கு இரவு விருந்தளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான, நீடித்த உறவுகளைக் குறிக்கும் வகையில் புதிய சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

‘நமது நட்பை ஆழப்படுத்துவோம்’ என்ற வாசகம் நீருக்கடியில் காட்டப்பட்டது.

தமது குழுவினர் இதற்கு ஏற்பாடு செய்ததாக ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் வோங் குறிப்பிட்டு இருந்தார்.

“இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட வலுவான தனிப்பட்ட பிணைப்புகளே இருதரப்பு உறவுக்கு மையமாக உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

புருணைப் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அமைச்சராகவும் இருக்கும் திரு பில்லாவைச் சந்திக்கும் வாய்ப்பை எப்போதும் மதிப்பதாகக் கூறிய பிரதமர் வோங், இரு நாடுகளும் உறவை தொடர்ந்து வலுப்படுத்திவரும் நிலையில் மேலும் பல சந்திப்புகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அக்டோபர் 1ஆம் தேதி நடந்த இரவு விருந்தைத் தொடர்ந்து மறுநாள் காலை துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் காலை உணவுச் சந்திப்பு நடைபெற்றது.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் இளவரசரும் அவரது குழுவினரும் தானியங்கி வாகனங்களில் பயணம் செய்தனர்.

ஜேடிசி, சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி) ஆகியவை இந்த வட்டாரத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தங்களுக்கு விளக்கியதாகத் திரு கான், ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

மனித இயந்திரங்கள் பல்வேறு பணிகள் செய்வதை எஸ்ஐடி மாணவர்கள் நேரடியாகச் செய்துகாட்டினர்.

பிரதமர் வோங்கின் அழைப்பை ஏற்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை திரு பில்லா சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இரு நாடுகளின் அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கு இடையே உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 12வது சிங்கப்பூர்-புருணை இளம் தலைவர்கள் திட்டத்திற்குத் தலைவர்கள் இருவரும் தலைமை தாங்குகின்றனர்.

2013ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இவ்வாண்டு பசுமைப் பொருளியல், நிதி, பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இளவரசரின் முதல் நாள் பயணம் (செப்டம்பர் 28), போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் வழிநடத்திய துவாஸ் துறைமுகச் சுற்றுலாவுடன் தொடங்கியது.

2026ஆம் ஆண்டில் சிங்கப்பூரும் புருணையும் பாதுகாப்பு உறவின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் புருணை இளவரசரின் பயணம் அமைந்துள்ளது.