சிங்கப்பூர்: ஆசியா மற்றும் உலகின் இணைப்பு மையம்
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல் போன்ற தொழில்நுட்பங்கள் தீவிரமடையும் இக்காலத்தில், உலகெங்கும் நிலவும் தொழில்நுட்பப் போட்டிகளுக்கு நடுவே ஆசியாவையும் உலகையும் இணைக்கும் உலகளாவிய ஆசிய மையமாக (Global-Asia node) சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று தேசிய ஆய்வு அறநிறுவனத் தலைவர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
மரினா பே சேண்ட்ஸில் வியாழக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற பிஸ்னஸ் டைம்ஸ் (பிடி) நாளேட்டின் 50ஆம் ஆண்டுநிறைவு விருந்து நிகழ்ச்சியில், அதன் ஆசிரியர் சென் ஹுய்ஃபென்னுடன் சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார் திரு ஹெங்.
எல்லைகளைத் தாண்டிப் புத்தாக்கம் படைப்பது, தென்கிழக்காசியாவில் அடுத்தகட்டப் பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடல் அமைந்தது.
“பயணங்களின்போது நமக்குக் கைகொடுக்கும் அனைத்துலகப் பயன்பாட்டு மின்பொருத்தி (Universal adapter) போலச் சிங்கப்பூரர்களும் உள்ளூர் நிறுவனங்களும் நீக்குப்போக்குடன் திகழ வேண்டும். வெவ்வேறு மின்கட்டமைப்புகளில் இணைந்து ஆற்றலைப் பெறுவதுபோல, உலகின் எந்த அமைப்புடனும் பிணைந்து செயல்படும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்க, தொழில்முனைப்புத் திட்டத்தின்கீழ் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளுக்காக $37 பில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிய அவர், ஆசியானின் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையும் $3 டிரில்லியன் பொருளியல் சந்தையும் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் சிறிய சந்தையைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய நிறுவனங்கள் வட்டாரத்திற்குள் விரிவடைவதற்குக் கைகொடுக்கும் தலைசிறந்த தொடக்கத் தளமாக விளங்குவதாகத் திரு ஹெங் கூறினார். சட்டத்தின் ஆட்சி, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவை நாட்டின் பலங்களாகும் என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசுகையில், ‘என்விடியா’ நிறுவனத்தின் ‘5 அடுக்கு ஏஐ கட்டமைப்பு’ மாதிரியை அவர் மேற்கோள் காட்டினார். ஆற்றல், நுண்சில்லுகள், கட்டமைப்பு, மாதிரிகள், பயன்பாடுகள் ஆகிய ஐந்து அடுக்குகளில், முதன்மை அடுக்கான பசுமை ஆற்றலை ஆசியான் மின்கட்டமைப்பு (ASEAN Power Grid) வாயிலாக வர்த்தகம் செய்ய முடியும் என்றார் திரு ஹெங்.
மேலும், மருத்துவத் துறையில் மரபணு வரிசைமுறைத் தரவுகளைப் பயன்படுத்தி துல்லிய மருத்துவத்தை உருவாக்கச் சிங்கப்பூரின் பல்லினச் சூழல் மிகச் சிறந்த களமாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வர்த்தகங்கள் செயற்கை நுண்ணறிவை மேம்பட்ட விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தெரிந்த ஒரு வல்லுநர், அதைப் பயன்படுத்தாத வல்லுநருக்கு மாற்றாக இருப்பார் என்று தாம் புரிந்துகொண்டதாகக் கூறினார்.
நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைச் செலவுக் குறைப்பிற்கு மட்டுமன்றித் தொழிலை மறுசீரமைக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றார் திரு ஹெங். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருவதாக அவர் கூறினார்.
வட்டார அளவில், ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தம் (DEFA) மூலம் வட்டார வர்த்தகத்தையும் தொழில்நுட்பப் பகிர்வையும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏஐ காலத்தில் ஊடகங்களின் பங்கு
இதனிடையே, ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளேட்டிற்குத் திரு ஹெங் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில், கடந்த அரை நூற்றாண்டாகச் சிங்கப்பூரின் பொருளியல் மாற்றங்களை எழுதிவரும் ‘பிடி’ நாளேட்டின் பங்கு குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய நிதி நெருக்கடி, கொவிட்-19 போன்ற முக்கியப் பொருளியல் சவால்களையும் திருப்புமுனைகளையும் பதிவுசெய்ததன் மூலம் ‘பிடி’ நாளேடு ஒரு வகையில் நாட்டின் பொது நினைவகமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.
கொள்கை ஆவணங்கள் திசையைத் தீர்மானித்தாலும், அக்கொள்கைகள் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடும்ப வணிகங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஊடகங்களே வெளிப்படுத்துகின்றன என்றார் அவர்.
எதிர்கால உலகை நான்கு முக்கியச் சக்திகள் தீர்மானிக்கும் என்று திரு ஹெங் சுட்டிக்காட்டினார். அவை உலகமயமாக்கலின் வீழ்ச்சி (Deglobalisation), மின்னிலக்கமயமாக்கல் (Digitalisation), கரிம வெளியேற்றத்தைக் குறைத்தல் (Decarbonisation), செல்வப் பகிர்வில் நிலவும் சமத்துவமின்மை (Distribution) ஆகியவையாகும். இந்தச் சவால்களைச் சந்திக்கச் சிங்கப்பூரும் நிறுவனங்களும் ஆயத்தமாக வேண்டும் என்றார் அவர்.
“செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களும் போலித் தகவல்களும் மலிந்துள்ள இக்காலத்தில், ஆழமான பகுப்பாய்வும் நம்பகத்தன்மையைத் தக்கவைத்தலுமே ஊடகங்களின் தலையாய கடமை,” என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.