கோனி தீவில் புதிய ‘ஒபிஎஸ்’ பள்ளி திறப்பு
கோனி தீவில் சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கைப் பள்ளியின் (ஒபிஎஸ்) புதிய வளாகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
அதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் எல்லா உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஒரு வெளிப்புற நடவடிக்கை முகாமில் கலந்துகொண்டு அனுபவம் பெறலாம்.
பொங்கோலுக்கு அருகே உள்ள கோனி தீவில் அமைந்துள்ள 12 ஹெக்டர் பரப்பளவிலான வளாகம், ஒபிஎஸ் பள்ளியின் ஆகப் பெரிய வளாகமாகும். உயரத்தில் மேற்கொள்ளப்படும் 70 சாகச நடவடிக்கை அங்கங்களும் 30 குழு நடவடிக்கை அங்கங்களும் அதில் அமைந்துள்ளன.
உடற்குறையுள்ள மாணைவர்களுக்கான வசதிகள்
உடற்குறையுள்ள மாணவர்களுக்கு ஏதுவான சக்கரை நாற்காலிப் பயன்பாட்டு அங்கங்களும் அவற்றில் அடங்கும். முன்பு அத்தகைய மாணவர்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் இருந்தது.
புதிய ஒபிஎஸ் வளாகத்தைப் பிரதமர் லாரன்ஸ் வோங் திறந்து வைத்தார். கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் கல்வி இரண்டாம் அமைச்சருமான டேவிட் நியோ, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்குமான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யானும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர் வோங், தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன் மூலம் அந்த மாணவர்கள் ஒபிஎசின் தலைமைத்துவப் பயிற்சிகளில் பங்கேற்க முடியும்.
மேலும் சிக்கலான, பிரச்சினைகள் அதிகம் எழக்கூடிய உலகச் சூழலில் இளையர்களின் குணாதிசியங்களை வளர்ப்பது மேலும் முக்கியத்துவம்வாய்ந்த ஒன்றாக உருவெடுத்துள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு பின்னடைவிலிருந்தும் சவாலிலிருந்தும் நம்மால் இளையர்களைப் பாதுகாக்க முடியாது. அதேவேளை, சவால்களைத் தன்னம்பிக்கையுடனும் மனவுறுதியுடனும் எதிர்கொள்ளத் தேவையான திறன்களையும் ஆற்றலையும் அவர்களிடையே நாம் தொடர்ந்து வளர்க்கவேண்டும். அதைச் செய்வதுதான் சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கைப் பள்ளியின் இலக்காகும்,” என்றும் அவர் விவரித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மூன்றாவது ஒபிஎஸ் கிளை
கோனி தீவில் அமைக்கப்பட்டுள்ள ஒபிஎஸ் வளாகம் அப்பள்ளியின் மூன்றாவது கிளையாகும்.
மற்ற இரு வளாகங்கள் ஊபின் தீவிலும் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்திலும் அமைந்துள்ளன.