கோல்ஃப் விளையாட்டில் ஒரே நாளில் 2 பதக்கம்.. பிரணவி தங்கம்... மகளிர் அணி வெள்ளி வென்று வரலாற்று சாதனை
கோல்ஃப் விளையாட்டில் ஒரே நாளில் 2 பதக்கம்.. பிரணவி தங்கம்... மகளிர் அணி வெள்ளி வென்று வரலாற்று சாதனை
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி கோல்ஃப் விளையாட்டில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை பிரணவி அர்ஸ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே கோல்ஃப் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மேலும், அதிதி அசோக், தீக்ஷா தாகர் மற்றும் பிரணவி அர்ஸ் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்று நாட்டுக்கு இரட்டைப் பெருமை சேர்த்துள்ளது.
மைசூரைச் சேர்ந்த 23 வயதான பிரணவி அர்ஸ், முந்தைய நாளின் முடிவிலேயே 15 அண்டர் 195 புள்ளிகளுடன் 3 ஷாட்கள் முன்னிலையில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இறுதிச் சுற்றின் 3வது குழியில் (Hole) அவர் செய்த தவறால் முன்னிலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டது. அதேநேரத்தில், சீனாவின் ருவோனிங் யின் மற்றும் சிங்கப்பூரின் ஷானன் டான் ஆகியோர் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
அந்த பின்னடைவில் இருந்து மின்னல் வேகத்தில் மீண்டு வந்த பிரணவி அர்ஸ், 6, 10 மற்றும் 13வது குழிகளில் அபாரமாக 'பேர்டி' அடித்து மீண்டும் முன்னிலை பெற்றார். 18வது குழியில் சிறிதும் பதற்றமடையாமல் துல்லியமாக பந்தை அடித்து, சிங்கப்பூர் மற்றும் சீன வீராங்கனைகளை வெறும் ஒரு ஷாட் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி வரலாற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
தனிநபர் பிரிவில் தங்கம் வென்றது மட்டுமின்றி, மகளிர் அணிகள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான அதிதி அசோக், தீக்ஷா தாகர் மற்றும் பிரணவி அர்ஸ் கூட்டணி அபாரமாக விளையாடி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது. இதன் மூலம் கோல்ஃப் களத்தில் ஒரே நாளில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி என 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கர்நாடக மாநிலம் மைசூரில் 2003 ஆம் ஆண்டு பிறந்த பிரணவி அர்ஸ், தனது 6வது வயதிலேயே கோல்ஃப் விளையாடத் தொடங்கினார். ஜூனியர் மற்றும் அமெச்சூர் பிரிவுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பட்டங்களை வென்ற அவர், 2020 இல் தொழில்முறை கோல்ஃப் வீராங்கனையாக மாறினார்.
2025 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொழில்முறை கோல்ஃப் தொடரில் ஆடவர் வீரர்களை எதிர்த்துப் போட்டியிட்டு பட்டம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர். ஐரோப்பிய மகளிர் டூர் தொடர்களில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டாப் 5 இடங்களை பிடித்து சர்வதேச அளவில் முத்திரை பதித்துள்ளார்.
கடந்த 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் 13வது இடத்தையும், அணிகள் பிரிவில் 4வது இடத்தையும் பிடித்திருந்த பிரணவி அர்ஸ், இம்முறை தனது அசாத்திய திறமையால் தங்கப் பதக்கத்தை வென்று இந்திய கோல்ஃப் வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.