📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 16, 2026 04:33 PM

"இதை மட்டும் பண்ணா சஞ்சு சாம்சன் சொதப்பவே மாட்டார்".. கவாஸ்கர் சொன்ன 'சக்சஸ் சீக்ரெட்'

"இதை மட்டும் பண்ணா சஞ்சு சாம்சன் சொதப்பவே மாட்டார்".. கவாஸ்கர் சொன்ன 'சக்சஸ் சீக்ரெட்'

"இதை மட்டும் பண்ணா சஞ்சு சாம்சன் சொதப்பவே மாட்டார்".. கவாஸ்கர் சொன்ன 'சக்சஸ் சீக்ரெட்'

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடத் தொடங்கி பின்னர் அதிரடி காட்டிய அணுகுமுறையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இந்த பாணியைத் தொடர்ந்து பின்பற்றினால் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் ஒருபோதும் சொதப்பவே மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சஞ்சு சாம்சன், ஆரம்பத்தில் கவனமாக விளையாடி 12 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு அதிரடி ஆட்டம் ஆடிய அவர், வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்து, மொத்தம் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வெல்ல உதவினார்.

தொலைக்காட்சி நேரலையில் பேசிய சுனில் கவாஸ்கர், "சஞ்சு சாம்சனுக்கு தற்போது தேவைப்படுவது பேட்டிங்கில் ஒரு நிலையான ஆட்டம் மட்டுமே. 20 ஓவர் போட்டியில் தொடக்க வீரர்களுக்குத்தான் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது ஆடியதைப் போல முதலில் களத்தில் நிலைத்து நின்று, பின்னர் அடித்து ஆடினால் அவரால் தொடர்ந்து 50 மற்றும் 60 ரன்களைக் குவிக்க முடியும்" என்றார்.

தொடர்ந்து பேசிய கவாஸ்கர், "190 அல்லது 200 ரன்கள் போன்ற இமாலய இலக்குகளைத் துரத்தும் போது மட்டுமே முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட முயல வேண்டும். ஆனால் சுமாரான இலக்குகளைத் துரத்தும் போது, முதல் பந்திலேயே அதிரடி காட்ட முயல்வதால்தான் சஞ்சு சாம்சன் பல போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கிறார். அதைத் தவிர்த்து சற்று பொறுமை காத்தால் அவர் நிச்சயம் தொடர்ச்சியாக ரன் குவிப்பார்" என்று தெரிவித்தார்.

2026 டி20 உலகக்கோப்பையின் கடைசி மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் அதன் பின் ஆடிய சில போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தொடரில் அடித்த அதிவேக அரைசதம் அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளது.