ஐசிஏ செயலி: மேம்படுத்தப்பட்ட எஸ்ஜி வருகை அட்டை
செப்டம்பர் 30 முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) கைப்பேசிச் செயலி மூலம் மேம்படுத்தப்பட்ட எஸ்ஜி வருகை அட்டையைப் பூர்த்தி செய்யலாம்.
ஆணையம் புதன்கிழமை (செப்டம்பர் 16) அந்தத் தகவலைத் தெரிவித்தது.
புதிய மொழிகளை உள்ளடக்கி, தேவையான விவரங்களைப் பூர்த்திசெய்ய கடப்பிதழை வருடும் வசதியைக் கொண்டுள்ள அந்த மேம்படுத்தப்பட்ட வருகை அட்டை, தற்போது ஆணையத்தின் இணையத்தளத்தில் மட்டுமே உள்ளது.
செப்டம்பர் 16ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், செப்டம்பர் 30 முதல் பயணிகள் தங்களது வருகை அட்டையைச் சமர்ப்பிப்பதற்குமுன் ‘மைஐசிஏ’ (MyICA) செயலியைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
நிலச் சோதனைச்சாவடிகளில் குடிநுழைவைக் கடந்துசெல்வதற்கு, கியூஆர் குறியீடுகளை உருவாக்க அந்தச் செயலியைப் பயன்படுத்தும் பயணிகளுக்கும் அது பொருந்தும் என்று ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூருக்குள் நுழைவதற்குமுன் அனைத்துப் பயணிகளும் அந்த எஸ்ஜி வருகை அட்டைக்கான விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
அவர்களில் சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அடங்குவர். இருப்பினும், குடிநுழைவைக் கடந்துசெல்லாமல் மாற்றுப் பயணம் மேற்கொள்பவர்கள், உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய நிலச் சோதனைச்சாவடிகள் வழியாகப் பயணிக்கும் உள்ளூர்வாசிகள் ஆகியோருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.