இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது
சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவுபெற்றன. தொடர்ந்து வேட்பாளர்களின் மனுக்கள் இன்று (செப்.17) பரிசீலனை செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்யபாமா ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அதன்பின் அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தனர். அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இவ்விரு தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த செப்.9-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக, தவெக, திமுக, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 48 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாளான நேற்று மட்டும் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். ஒரே நாளில் அதிகம் பேர் கூடியதால் 3 மணியை கடந்தும் மனுத்தாக்கல் நடைபெற்றது. மேலும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் கடைசி நாளான நேற்று தவெக வேட்பாளர் சத்யபாமா, அதிமுக வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் சுயேச்சைகள் என 34 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
ஏற்கெனவே மனுதாக்கல் செய்த திமுக வேட்பாளர சுகன்யா மற்றும் 17 சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தம் 51 பேர் தாராபுரம் தொகுதியில் போட்டி யிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுதாக்கலுக்கு முன்னதாகவே தவெக வேட்பாளர் சத்யபாமா, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், லோகேஷ் தமிழ்செல்வன், கமலி, விஜயலட்சுமி, விஜயபாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் ஊர்வலமாக சென்றனர்.
ஒரேநாளில் அடுத்தடுத்து வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ததால் தாராபுரம் நகரின் முக்கிய சாலைகள் அரசியல் கட்சி தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.
இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செப். 17) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் செப். 19-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தற்போதைய நிலவரப்படி களத்தில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என இரு தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.