‘இஸ்ரேல் விமான நிலையம் மீது விமானத்தை மோத சதி’
டெல் அவிவ்: அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போன்று இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது விமானத்தை மோதி மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக ஓமன் துணை பைலட் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்துக்கு ஃபிளை துபாய் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை நடுவானில் கடத்த ஓமனைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி முயற்சி செய்தார். இந்திய தலைமை பைலட் ஸ்மித் மச்சார் தனது உயிரை பணயம் வைத்து விமான கடத்தல் முயற்சியை முறியடித்தார்.
ஜூலையில் தாக்குதல் முயற்சி
தற்போது ஐக்கிய அரபு அமீரக போலீஸார், துணை பைலட் ஹமாம் அல் ஹமாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் ஹமாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். இதற்காகவே ஃபிளை துபாய் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். இந்த நிறுவனம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமான சேவைகளை இயக்கி வந்தது. இதைப் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதலை நடத்த மிக நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தேன்.
கடந்த ஜூலையில் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது விமானத்தை மோத திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எனது நெருங்கிய நண்பர்கள் விமானத்தில் இருந்தனர். அவர்கள் உயிரிழக்கக்கூடாது என்பதற்காக கடைசி நேரத்தில் தாக்குதல் திட்டத்தை கைவிட்டேன். சதித்திட்டத்தை முறியடித்தார். கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 110 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரத்தின் மீது விமானங்களை மோதி அல்-காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதே பாணியில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையமான பென் குரியன் மீது விமானத்தை மோத சதித் திட்டம் தீட்டியிருந்தேன். இதற்காக இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை தாக்கி கொலை செய்துவிட்டு விமானத்தை எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் இந்திய பைலட் ஸ்மித், காக்பிட் கதவை திறந்து எனது சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார்.
வேறுவழியின்றி விமானத்தை தரையில் மோதி தகர்க்க முடிவு செய்தேன். இதற்காக ஆட்டோ பைலட்டை துண்டித்தேன். விமான இன்ஜின்களை அணைத்தேன். விமான கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்தினேன். மணிக்கு 970 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி விமானம் தரையிறங்கியது. அதற்குள் இஸ்ரேல் பயணிகள் என்னை மடக்கிப் பிடித்துவிட்டனர். விமானத்தில் இருந்த இரு பைலட்டுகள் விமானத்தை மீண்டும் இயக்கி பத்திரமாக தரையிறக்கிவிட்டனர். இவ்வாறு ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியதாவது: இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதன் பிரதான பகுதி மீது விமானத்தை மோத துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக காக்பிட் அறைக்குள் இந்திய விமானி ஸ்மித்தை ரகசியமாக கொலை செய்ய அவர் தீவிர முயற்சி செய்திருக்கிறார். பின்தலையில் கோடாரியால் தாக்கியதில் ஸ்மித் நிலைகுலைந்துள்ளார். ஆனாலும் அவர் வீர, தீரத்துடன் போராடி காக்பிட் அறைக் கதவை திறந்ததால் பேரழிவு தடுக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை இந்திய பைலட் உயிரிழந்து இருந்தால், பென் குரியன் விமான கட்டுப்பாட்டு அறையின் அனுமதியை பெற்று தரையிறக்குவது போன்று நடித்து விமானத்தை அதிவேகத்துடன் மோத துணை பைலட் சதித் திட்டம் தீட்டியிருந்தார்.
இதை ஒரு விமான விபத்து போல சித்தரிக்கவும் அவர் வியூகம் வகுத்திருந்தார். இந்திய விமானி ஸ்மித்தின் வீரம், விவேகத்தால் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் தடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.