இனவாத அரசியல் வேண்டாம்: அன்வார்
மலாக்கா: அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக இனப் பிரச்சினைகளைக் கையிலெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அரசியல் களத்தில் பலவீனமான அல்லது இக்கட்டான சூழலில் இருக்கும்போது, சில அரசியல் கட்சிகள் இத்தகைய உத்திகளைப் பயன்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.
“அரசியல் சூழல் சிக்கலாகவும் சர்ச்சைக்குரியதாகவும் மாறும்போது, கட்சிகள் அவற்றின் ஆதரவை விலக்கிக்கொண்டு இனவாத அட்டையைக் கையில் எடுக்கின்றன. இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும்போதெல்லாம், மீண்டும் இனம் தொடர்பான விவகாரங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன,” என்று ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 20) கோட்டா ஷாபண்டாரில் நடைபெற்ற 41வது மலேசியச் சீனப் பண்பாட்டு விழாவை அதிகாரபூர்வமாகத் தொடக்கிவைத்து உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் கூறினார்.
இந்நிகழ்வில் தொழில்முனைவர்கள் மேம்பாட்டு, கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீக்கியோங், மலாக்கா மாநிலச் செயலாளர் சல்ஹா சாலே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மலேசியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டில் உள்ள எந்தவொரு சமுதாயத்துக்கும் இனப் பிரச்சினைகள் இனி முதன்மைப் பொருளாக இருக்கக்கூடாது என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
மலேசியா 70வது தேசிய தினத்தை நெருங்கும் வேளையில், நாட்டின் தலைமைப் பொறுப்பில் யார் இருந்தாலும், அனைத்து இனங்களின் ஒருங்கிணைந்த பலத்துடன் மலேசியா வளர்ச்சிபெறும் ஒரு தேசமாக உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒன்றிணைந்த மலேசியாவின் எதிர்காலப் பாதுகாப்பில் மட்டுமே இனி ஒவ்வொரு குரலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றில் அரசாங்கம் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளாது என்றும் அதை முற்றிலுமாக ஒழிக்க உறுதியளிப்பதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.