TVK vs CPM: ``தவெக அரசில் இன்னும் ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறை தேவை"
TVK vs CPM: ``தவெக அரசில் இன்னும் ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறை தேவை" - சிபிஎம் சண்முகம் விமர்சனம்
தவெக அரசின் புதிய தலைமைச் செயலக விவகாரம் குறித்து சிபிஎம் சண்முகம் விமர்சித்திருக்கிறார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ``புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக பேசுகிறார்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் DPR – Detailed Project Report தயாரிக்கப்படும். அதன் பிறகுதான் அதைச் செய்யலாமா, வேண்டாமா என்று முதலமைச்சர் முடிவு செய்வார். மீனவ சகோதரர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ``புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று தவெக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 564, முதலமைச்சருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரியாமல் எவ்வாறு வெளிவந்திருக்க முடியும். முதலமைச்சர் ஒப்புதல் அளிக்காமல் அரசாணை வந்திருந்தால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் இந்த தவறான முடிவு எடுக்கப்பட்டதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
தலைமைச் செயலகம், சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி போன்ற நிரந்தரக் கட்டுமானங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பொருத்தமான மாற்று இடங்களில் அமைக்க பல வாய்ப்புகள் சென்னை மாநகரத்திற்குள்ளேயே இருக்கும்போது, பிடிவாதமாக மீனவர் குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு அங்கே அமைப்பது ஜனநாயகப் பண்பாகாது.
இந்த விவகாரத்தில் சிபிஎம் மக்களின் நலனில் இருந்தே கோரிக்கைகளை முன்வைக்கிறது. தவெக அரசு மட்டுமன்றி வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நியாயமான கோரிக்கையைத்தான் எழுப்பியிருப்போம். கடந்த கால தி.மு.க ஆட்சியில் பல்லாவரம் அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு, சீனிவாசபுரம் மற்றும் கே.பி. பார்க் மக்கள் பிரச்னை, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் 12 மணி நேர வேலை நேரச் சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டம் வரை பல்வேறு மக்கள் போராட்டங்களை சிபிஎம் முன்னின்று நடத்தியது.
ஆனால், கோரிக்கையின் நியாயத்தை விவாதிக்காமல் 'அன்று ஏன் போராடவில்லை, இன்று ஏன் போராடுகிறீர்கள்' என்று கேட்பது பிரச்னையை திசைதிருப்பும் தந்திரம். தற்போதைய த.வெ.க அரசின் அணுகுமுறை ஜனநாயகப்பூர்வமாக இல்லை. பல முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக அறிவிக்காமல், தோழமை மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதே ஒரு நல்ல அரசுக்கு அழகு. தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் அதேவேளையில், அரசின் தவறான கொள்கைகளை இடித்துரைத்து சுட்டிக்காட்டும் கடமையையும் சிபிஎம் தொடர்ந்து செய்யும்." என்றார்.