📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 15, 2026 12:32 AM

இன, சமய நல்லிணக்க அதிபர் மன்றத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

இன, சமய நல்லிணக்க அதிபர் மன்றத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

புதிய இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) முதல் நடப்புக்கு வருவதைத் தொடர்ந்து அதன்கீழ் நிறுவப்பட்ட இன, சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றமும் செயல்படவுள்ளது.

அந்த மன்றத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சூ ஹான் டெக் பொறுப்பேற்பார் என்று அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அறிவித்துள்ளது.

நடப்பில் உள்ள சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றத்துக்குப் பதிலாக புதிய மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்கீழ், இன, சமய நல்லிணக்கத்தைப் பராமரிப்பதைப் பாதிக்கும் விவகாரங்களில் சுயேச்சையான தீர்ப்பை வழங்கி, கூட்டுப் பொறுப்புடன் ஆலோசனைகளை வழங்குவது இன, சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றத்தின் பொறுப்பாகும்.

மேலும், புதிய சட்டம் அல்லது சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவுகள் குறித்து அதிபருக்கு அம்மன்றம் பரிந்துரைகளையும் வழங்கும்.

அந்தப் புதிய மன்றத்தில் சிங்கப்பூரின் முக்கிய இன, சமயச் சமூகங்களின் பிரதிநிதிகளும் பொதுச்சேவை அல்லது சமூக உறவுகளில் சிறந்து விளங்கும் தனிநபர்களும் இடம்பெற்றுள்ளதாக அதிபர் அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தலைவர் தவிர 11 உறுப்பினர்கள் அந்த மன்றத்தில் இருப்பர். இந்து ஆலோசனை வாரியத்தின் தலைவர் கே. செங்குட்டுவன், இந்தியச் சமூகப் பிரதிநிதி பாலா ரெட்டி போன்றோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.

பரந்த அளவிலான கண்ணோட்டங்களையும் அனுபவங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அவ்வாறு பல்வேறு தரப்பினர் புதிய மன்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.