📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 16, 2026 12:31 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. தமிழில் முழங்க வேண்டும்.. வா.கெளதமன் ஆவேசம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. தமிழில் முழங்க வேண்டும்.. வா.கெளதமன் ஆவேசம்!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கும்பாபிஷேகத்தில் தமிழ் மொழிக்கும் தமிழ் ஓதுவார்களுக்கும் உரிய சமபங்கு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநர் வா.கவுதமன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் வா.கவுதமன், நீதியரசர் கிருபாகரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி, கோவில் வழிபாடுகளில் தமிழ் மொழிக்கு உரிய சமத்துவம் வழங்கப்பட வேண்டும். வேள்வி சாலை, கருவறை, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றும் நிகழ்வு என அனைத்து இடங்களிலும் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ் திருமுறைகள் முழங்கப்பட வேண்டும்.

ஓதுவார்கள் காவலாளிகளா?: ஒவ்வொரு தளத்திலும் ஓதுவார்களைச் சும்மா நிறுத்தி வைப்பது மட்டும் தமிழ் வழிபாட்டுக்கு தரும் மரியாதை ஆகாது. ஓதுவார்கள் ஒன்றும் காவலாளிகள் அல்ல. தமிழ் அர்ச்சகர்களுக்கும் சமமான பங்கு வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் இருக்கும்போது, அந்த உரிமையை நடைமுறையில் தராமல் இருப்பது ஏன்? எங்களுடைய முன்னோர்கள் கட்டிய கோவிலில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும்.

போராட்டம் வெடிக்கும்: அதிகாரி ஆய்வு செய்கிறோம் என்கிறார்கள், பேசுகிறோம் என்கிறார்கள். இதுவரை மூன்று முறை பேசிவிட்டார். இன்னும் முறையாக பதில் சொல்லவில்லை. தமிழ் அர்ச்சகர்களுக்கு சமபங்கு தரவேண்டும் என சட்டம் இருக்கே. அமைச்சர் ராமேஷ் அவர்கள் நேர்மையான முறையில், நாளை காலைக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள், கருவறையில் யார் தமிழ் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் பாடுகிறார்கள் என்பது தொடர்பான முழுமையான அடையாள விவரங்களை ஓதுவார்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அந்த விவரங்களை வழங்க மறுப்பது ஏன். நீங்கள் யார் யாருக்காக அமைச்சராக இருக்கிறீர்கள். இந்து சமய அறநிலையத்துறை யாருக்காக செயல்படுகிறது. நாளை காலைக்குள் இதற்கு உரிய பதில் வரவில்லை என்றால், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு திரண்டு நின்றது போல, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தமிழ் உரிமைக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களும் திரண்டு நிற்பார்கள் என வ கௌதமன் கூறியுள்ளார்.