“எங்கிட்ட டிப்ஸ் வாங்கிவிட்டு பாகிஸ்தானுக்கு எதிராகவே ட்வீட் போடுகிறார்” பதான் குறித்து அக்ரம்
“எங்கிட்ட டிப்ஸ் வாங்கிவிட்டு பாகிஸ்தானுக்கு எதிராகவே ட்வீட் போடுகிறார்” பதான் குறித்து அக்ரம்
மும்பை: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகப் பதிவிட்டு வருவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசி உள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இளம் வீரரான இர்பான் பதானை வாசிம் அக்ரம் சந்தித்துள்ளார்.
வாசிம் அக்ரமின் தீவிர ரசிகராக இருந்த பதான், அவரது பந்துவீச்சு ஸ்டைலை பின்பற்றி பந்துவீசினார். அப்போது அக்ரம் அவருக்கு மணிக்கட்டு பயன்படுத்தும் முறை மற்றும் பந்துவீச்சு உத்திகள் குறித்து சில முக்கிய யோசனைகளை வழங்கியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இர்பான் பதான், தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் சார்ந்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்களின் போது, "ஞாயிற்றுக்கிழமை எப்படி இருந்தது பக்கத்துக்கு வீட்டுக்காரரே?" என்பது போன்ற பதிவுகள் வெளியிட்டு பாகிஸ்தான் ரசிகர்களைக் கடுப்பேற்றுவது வழக்கம்.
இது குறித்து பேசிய வாசிம் அக்ரம், "இர்பான் பதான் 2004 இல் தனது முதல் ஆஸ்திரேலிய தொடரில் என்னை சந்தித்தார். அவர் என்னுடைய பெரிய ரசிகர். அவருக்கு சில டிப்ஸ்களை சொன்னேன். அவருடைய பவுலிங் முறை ஆரம்பத்தில் இருந்தே என்னுடையதை போன்றே இருந்தது. அவர் ஒரு நல்ல பையன். அவர் இன்னும் என்னைச் சந்தித்துப் பேசி வருகிறார். ஆனால் இப்போது அவர் சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதற்குப் பதிலடி கொடுக்க எங்கள் நாட்டு ரசிகர்களும் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்." என்றார்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதையும், பல பதிவுகளை வெளியிட்டு வருவதையும் சுட்டிக் காட்டி, "இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமே. இதைப் பழிவாங்கும் உணர்வோடு பார்க்கக் கூடாது. ஒருநாள் ஒருவர் வெற்றி பெறுவார். ஒருவர் தோல்வி அடைவார். அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்." என்று கூறினார் வாசிம் அக்ரம்.