“என் மிசா தியாகத்துக்கு மார்க் போட யாருக்கும் தகுதியில்லை”
திமுக முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விருது பெற்றவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர். படம்: எஸ். சத்தியசீலன்
சென்னை: ‘என் மிசா தியாகத்துக்கு மார்க்போட யாருக்கும் தகுதியில்லை’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து பல்வேறு விருதுகளை வழங்கினார். இவ்விழாவில், விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கு ‘பெரியார் விருது’, சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷுக்கு ‘அண்ணா விருது’, துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவாவுக்கு ‘கலைஞர் விருது’, மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கு ‘பாவேந்தர் விருது’, தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கு ‘பேராசிரியர் விருது’, இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜாவுக்கு ‘மு.க.ஸ்டாலின் விருது’, ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப.திருமா வேலனுக்கு ‘முரசொலி செல்வம் விருது’ வழங்கப்பட்டது.
விழாவில், பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, “நாம் எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம், வெற்றி பெற்றிருக்கிறோம், தோல்வியையும் சந்தித்து இருக்கிறோம். தேர்தலிலே அது சகஜம். அப்போதெல்லாம் நாம் ஒரு எதிரியோடு மோதினோம். ஆனால் இந்தமுறை கண்ணுக்குத் தெரியாத மாயாவி போல் வந்த ஒன்று இங்கே நின்றுவிட்டது. இந்த மாயாவி தமிழகத்தில் பரவி இருக்கிறது. இரண்டு இடங்களிலே நம்முடைய வீரர்கள் போர்க்களத்திலே நின்று கொண்டிருக்கிறார்கள். எதிரி மாயாவியாக வருவானா, ஆளாக வருவானா என்பதைப் பார்க்க வேண்டும். நாம் வென்றாக வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது மக்கள் முன்பு முதல்வர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் பஞ்ச் டயலாக், இப்போ ஃபாரின் ஷூட்டிங்.. எல்லாமே ரீல்ஸ்தான். திமுக ஆட்சியில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன்னாக இருந்தது.
இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. ஆனால் முதல்வர் இன்றைக்கு என்ன கோட் போட்டார், என்ன பட்டு வேஷ்டி கட்டினார்,
நெற்றியில் என்ன கலர் பொட்டுவைத்தார், ஜோசியர் என்ன சொன்னார் என்பதுதான் செய்தியாக வருகிறது. இதைப்பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது. அவர்கள் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், இந்த ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டி. ஒன்று மின்வெட்டு. இரண்டாவது அரிவாள் வெட்டு.
முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றதாகச் சொல்கிறார். இந்தியாவில் இருக்கும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போட எதற்கு லண்டன் போக வேண்டும்?. சட்டப்பேரவையில் உதயநிதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிசா, சர்க்காரியா கமிஷன் பற்றிப் பேசி திசை திருப்புகிறார்கள்.
என் மிசா கைதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட உங்களுக்கு தகுதி கிடையாது. சட்டப்பேரவை உறுப்பினர் மரணமடைந்தால் தான் இடைத்தேர்தல் வரும்.
ஆனால், முதல்முறையாக ‘ஜனநாயகம் மரணமடைந்ததால்’ இந்த இடைத்தேர்தல் வந்திருக்கிறது. ஆளுங்கட்சியின் யோக்கியதைக்கும், ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களித்து தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜென்-ஸி இளைஞர்களைக் கவர அவர்களின் மொழியிலேயே, அவர்களின் மொபைலிலேயே போய்ச்சேரும் வகையில் பிரச்சாரம் செய்யுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.