📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 20, 2026 02:02 AM

“மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது”

“மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது”

கோப்புப்படம்

சென்னை: “மாணவர் பாரதிதாசன் கல்விக் கட்டண விவகாரத்தில் திமுகதான் அரசியல் செய்கிறது. உண்மையில் திமுகதான் தலித் மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எஃப்ஐஆர் போட்டது திமுக அரசுதான்”என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “ மாணவர் பாரதிதாசன் கல்விக் கட்டண விவகாரத்தில் நாங்கள் எந்த அரசியலும் செய்யவில்லை, திமுகதான் அரசியல் செய்கிறது. அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் தொகை விவகாரத்தில் தவெக அரசு எந்த அரசியலும் செய்யவில்லை.

உண்மையில் திமுகதான் தலித் மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எஃப்ஐஆர் போட்டது திமுக அரசுதான். வேங்கைவயலின் முரளிராஜா என்பவர் என்னிடம் மனு கொடுத்திருந்தார். திமுக அரசு தன்னை வஞ்சித்துவிட்டதாக அவர் அதில் தெரிவித்தார். காவலரான முரளிராஜா இப்போது இடைநீக்கத்தில் உள்ளார்.

இப்படி தலித் இளைஞர்கள், மாணவர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்தது திமுக அரசு. நெல்லையில் கவின் படுகொலைக்கு காரணமான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய அப்போது பலமுறை விசிக போராட்டம் நடத்தியது. ஆனால் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படவில்லை. இப்போது தவெக ஆட்சி அமைந்த பின்னர்தான் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார்.

பாரதிதாசன் விவகாரத்தில் அக்கறை இருப்பது போல திமுக நாடகம் ஆடுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் பாரதிதாசனின் கல்விக் கட்டணத்துக்கான முழு தொகையையும் அனுப்பிவிட்டோம். அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் கடந்த ஆட்சியில் என்ன நடைமுறை இருந்ததோ, அதையேதான் இப்போதும் பின்பற்றுகிறோம்” என்றார்.