”எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலிக்கூத்தானது”
”எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலிக்கூத்தானது” - கடுமையாகச் சாடிய உயர் நீதிமன்றம்!
மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்திருப்பது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுதன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், சொந்த அரசியல் லாபத்திற்காக ஆறு அதிமுக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்திருப்பதால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தாமல், இந்தச் செலவுகளுக்கு வேட்பாளர்களைப் பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோல செய்வது கேலிக்கூத்தானது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். குறுகிய காலத்தில் ராஜிநாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதேபோன்ற வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க, மாற்றி உத்தரவிட்டனர்.