ராஜினாமா எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமதிக்கும் செயல்: ஐகோர்ட்
சென்னை; 'ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது, அவர்களுக்கு ஓட்டளித்த வாக்காளர்களை அவமதிப்பதாகும்; இது, கேலிக்கூத்தானது' என, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பின், அவர்கள் த.வெ.க.,வில் இணைந்தனர்.
தடை விதிப்பு இதில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாத காரணத்தால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் கமிஷனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்களின் தீர்ப்பை புறக்கணித்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தவர்கள், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சட்டம் வேண்டும் எனவே, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தேர்தலுக்கான செலவை வைப்புத் தொகையாக அவர்கள் செலுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின், மக்களின் தீர்ப்பை புறக்கணித்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்பவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த வழக்கு முடியும் வரை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.
த.வெ.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களான, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோரது வேட்பு மனுக்களை ஏற்க, தேர்தல் கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறிஉள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் வாதாடியதாவது:
எந்த காரணமும் இல்லாமல், குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானதோடு, மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டளித்த மக்களின் விரல் மை காய்வதற்கு முன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, இன்னொரு தேர்தலை சந்திக்க வைத்துள்ளனர். இதனால், மக்களின் நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:
மக்கள் தங்கள் ஓட்டை செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் வாயிலாக, மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் மீண்டும் போட்டியிடுவது கேலிக்கூத்தானது. இது போன்ற சூழலை எதிர்கொள்ள, தேர்தல் கமிஷனிடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா?
மக்களின் உரிமையை தேர்தல் கமிஷன் பாதுகாக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தேர்தல் கமிஷன் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, ''தற்போது எழுந்துள்ள சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார்.
தள்ளிவைப்பு அதற்கு, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் கூட இடைத்தேர்தலில் போட்டியிட முடியும். ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது,'' என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி, வரும் 18ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.