📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 15, 2026 06:04 PM

எம்ஆர்டி நம்பகத்தன்மை: புதிய உச்ச சாதனை

எம்ஆர்டி நம்பகத்தன்மை: புதிய உச்ச சாதனை

சிங்கப்பூரின் எம்ஆர்டி ரயில் சேவைக் கட்டமைப்பு தனது நம்பகத்தன்மையில் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. முதிர்ச்சியடைந்த ஐந்து ரயில் பாதைகளில் நான்கு பாதைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளன.

நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) வெளியிட்ட அதன் அண்மைக்கால ரயில் நம்பகத்தன்மை அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நீடிக்கும் சேவைத் தடங்கல்கள் எதுவுமின்றி எம்ஆர்டி ரயில்கள் சராசரியாக 3.38 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து பயணம் செய்துள்ளன.

முழு எம்ஆர்டி ரயில் கட்டமைப்புக்கென நிர்ணயிக்கப்பட்ட ஒரு மில்லியன் ரயில்-கிலோமீட்டர் நம்பகத்தன்மை இலக்கைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம்.

ரயில் சேவையின் நம்பகத்தன்மையை அளவிடப் பயன்படுத்தப்படும் ‘கோளாறுகளுக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர்’ (எம்கேபிஎஃப்) எனும் பொறியியல் அளவீட்டின்படி இது கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தாமதத்தைச் சந்திப்பதற்கு முன் ஒரு ரயில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பதை இந்த எம்கேபிஎஃப் அளவீடு சுட்டிக்காட்டுகிறது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இந்தப் புள்ளிவிவரங்கள் சுழற்சிமுறையிலான 12 மாதச் சராசரியின் அடிப்படையில் அமைந்தவை ஆகும்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் இயக்கப்படும் கிழக்கு-மேற்கு ரயில் பாதை, வடக்கு-தெற்குப் பாதை ஆகிய இரண்டும் நம்பகத்தன்மையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளன.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் வட்ட ரயில் பாதையும் 2.51 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் தூரத்திலிருந்து 2.57 மில்லியன் ரயில்-கிலோமீட்டராகச் சிறிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படும் வடக்கு-கிழக்குப் பாதை, மிக உயர்ந்த நம்பகத்தன்மை கொண்ட ரயில் பாதையாகத் தொடர்ந்து திகழ்கிறது.

வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) டென் மைல் ஜங்ஷன் பணிமனையில் செய்தியாளர்களிடம் பேசினார் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் ரயில் கட்டமைப்பின் எம்பிகேஎஃப் அளவீடு இரண்டு மில்லியன் ரயில்-கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டியிருப்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை சிறப்பாக வைத்திருக்கத் தாங்கள் மிகக் கடுமையாக உழைத்து வருவதையே இது காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

ரயில் அமைப்புகள் பல பாகங்களையும் உதிரிப்பாகங்களையும் கொண்ட சிக்கலான அமைப்புகள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், “சில சமயங்களில் அமைப்புகளில் அல்லது உதிரிப்பாகங்களில் கோளாறுகள் ஏற்படுவதும் அதனால் தாமதமோ சேவைத் தடங்கலோ உண்டாவதும் தவிர்க்க முடியாதது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க நாங்கள் தீவிரமாக உழைப்போம்,” என்று உறுதி அளித்தார்.