📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 15, 2026 08:04 PM

முயிஸ்: முஸ்லிம் பெண்களுக்கான புதிய பிரிவு

முயிஸ்: முஸ்லிம் பெண்களுக்கான புதிய பிரிவு

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) முஃப்தி அலுவலகம், முஸ்லிம் மகளிருக்கான சிறப்புப் பிரிவையும் சமய ஆசிரியர் கட்டமைப்பையும் (உஸ்தாசாத்) வியாழக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற ‘இஸ்லாத்தில் மகளிரும் குடும்பமும்’ எனும் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது.

நான்கு பெண் அதிகாரிகளைக் கொண்ட இந்தச் சிறப்புப்பிரிவு, முஸ்லிம் மகளிரையும் குடும்பங்களையும் பாதிக்கும் சமயச் சிக்கல்கள் குறித்தும் தற்காலச் சவால்கள் குறித்தும் ஒருங்கிணைந்த முறையில் ஆய்வு செய்து வழிகாட்டுதல்களை வழங்கும்.

மறுபுறம், பள்ளிவாசல்கள், மதரசாக்கள், சமய நிறுவனங்களைச் சேர்ந்த பெண் சமயப் போதகர்களை சமய ஆசிரியர் கட்டமைப்பு ஒன்றிணைக்கிறது. இக்கட்டமைப்பு காலாண்டுக்கு ஒருமுறை கூடி, ஆய்வுகளைப் பகிர்ந்துகொள்வதோடு கூட்டு ஆய்வு, கல்விசார் திட்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

பிபிஐஎஸ் அமைப்பின் ஆதரவுடன் முஃப்தி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கைச் சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் நஸிருதீன் முகமது நாசிர் தொடக்கிவைத்தார்.

கருத்தரங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சமய அறிஞர்கள், சமுதாயத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 2027ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள கருத்தரங்கிற்கு இக்கலந்தாலோசனைகள் அடித்தளமாக அமையும்.