ஏர் இந்தியா: செலவைக் குறைக்க குழு அமைப்பு
பெங்களூர்: தங்களின் செயல்பாடுகளில் செலவை எப்படிக் குறைப்பது என்பதை அடையாளம் காண ஏர் இந்தியா நிறுவனம், குழு ஒன்றை அமைத்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெவோல்ட கெப்ராமரியாம் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் இத்தகவலை வெளியிட்டார்.
மேலும், செலவு செய்வதற்கு ஒப்புதல்வழங்கும் நடைமுறையை அது கடுமையாக்கியுள்ளது. ஆகாயப் போக்குவரத்துப் பகுதிகளில் இடையூறு ஏற்பட்டது, மத்திய கிழக்குப் பூசல், விமான எரிபொருள் விலை அதிகமாக இருப்பது ஆகிய பிரச்சினைகளை ஏர் இந்தியா கையாண்டுவரும் நிலையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தனது லாபம் ஈட்டும் ஆற்றலை மீட்டெடுக்கவும் பாதுகாப்புத் தரநிலைகளின்மீதான நம்பிக்கையை மீண்டும் உருவாக்கவும் ஏர் இந்தியா சிரமப்பட்டுவருகிறது. கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிதியாண்டில் ஏர் இந்தியாவுக்கு 2.3 பில்லியன் டாலர் (2.95 பில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டது. மேலும், சென்ற ஆண்டு ஜூன் மாதம் 260 பேரைப் பலிவாங்கிய விபத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று சிக்கியதிலிருந்து அந்நிறுவனம் ஒழுங்குமுறை மீளாய்வு தொடர்பில் சிக்கலில் மாட்டிக்கொண்டது.
நிறுவனம் அதன் உரிமையாளர்களான டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிடமிருந்து புதிதாகக் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டாலர் (1.92 பில்லியன் வெள்ளி) முதலீட்டை நாடுவதாகத் தகவலறிந்த இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தனர்.