இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
ஐதராபாத்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. உப்பல், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கமில் பூரன், குவென்டின் சாம்சன் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜுவெல் ஆண்ட்ரூ, ரொமாரியோ ஷெப்பர்ட் இடம் பெற்றனர். கேப்டன் ஷாய் ஹோப், ஜுவெல் ஆண்ட்ரூ இணைந்து வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை தொடங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 52 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. ஜுவெல் 21 ரன்னில் வெளியேற, ஹோப் - ஹெட்மயர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். ஹெட்மயர் 33 ரன் (12 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரோவ்மன் பாவெல் 24 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். ஹோப் - ஷெர்பேன் ரூதர்போர்டு ஜோடி 4வது விக்கெட்டுக்கு பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. நிதிஷ் குமார் வீசிய கடைசி ஓவரின் கடைசி 2 பந்தையும் இமாலய சிக்சருக்குத் தூக்கிய ஹோப் சதம் விளாசி அசத்தினார்.
டி20ல் இது அவரது 3வது சதமாகும். வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன் குவித்தது. ஹோப் 102 ரன் (50 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்), ரூதர்போர்டு 49 ரன்னுடன் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், பிரின்ஸ், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 24 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.