Drones Review: ட்ரோன்ஸ் விமர்சனம்.. ’பரிதாபங்கள்’ டிராவிட் ஹீரோவாக சாதித்தாரா?.. ஃபேண்டஸி படம் எப்படி?
சென்னை: ஜி.எம். மோர்கன் தயாரிப்பில் இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ளது ட்ரோன்ஸ் திரைப்படம். பரிதாபங்கள் டிராவிட் இந்த படத்தின் மூலம் நாயகனாக அப்கிரேட் ஆகிவிட்டார்.
இந்த வாரம் தனுஷின் ஓம், கலையரசனின் டைட்டானிக் உள்ளிட்ட படங்களே ஜெயிலர் 2 ரிலீஸ் காரணமாக தள்ளிப்போய் உள்ள நிலையில், தில்லாக ட்ரோன்ஸ் படம் வெளியாகி உள்ளது.
முதல் படத்திலேயே டிராவிட்டுக்கு சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் என 2 ஹீரோயின்கள், ஃபேண்டஸி கதை என அட்டகாசமான என்ட்ரி கிடைத்துள்ள நிலையில், படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ட்ரோன்ஸ் கதை: கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நண்பர்கள், 'பிளாக் ஹோல்' எனப்படும் ஒரு மர்மமான வீட்டில் தங்குகின்றனர்.
ட்ரோன் மூலம் உணவைத் தேடும் டிராவிட், ஒரு பழைய கட்டிடத்தில் வசிக்கும் சித்தி இத்னானியைக் கண்டு அவரது அழகில் மயங்கி காதல் கொள்கிறார். தனது பாட்டியால் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என முதலில் மறுக்கும் சித்தி இத்னானி, அதன் பின் டிராவிடின் காதலை ஏற்றுக்கொள்கிறார். ஒருகட்டத்தில் சூனியக்காரி பாட்டியான தேவதர்ஷினியிடம் சிக்கிக்கொள்ள, அதன்பின் நாயகன் டிராவிட் அங்கிருந்து எப்படித் தப்பித்தார், அதற்கு அவரது நண்பர்கள் எப்படி உதவினர் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.
படம் எப்படி இருக்கு?: கதை தொடங்கும்போது, இது நமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தோடு பார்க்க வேண்டிய படம் என்ற அலர்ட் கார்டை போட்டே ஆரம்பிக்கின்றனர். 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற டிராவிட், டியூட் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நிலையில், ட்ரோன்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.
லவ்வர் பாய், சூனியக்கார பேயிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது என உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் நல்ல முயற்சியைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இணையாக நடிகை அஞ்சலி நாயரும் நடிப்பால் அசத்துகிறார்.கருப்பு நிறத்தால் கேலிக்குள்ளாவதில் தொடங்கி, காதலுக்காக விட்டுக்கொடுக்கும் பெண்ணாகக் கண்களாலேயே பேசி நடித்திருக்கிறார் நடிகை அஞ்சலி நாயர். இவரது நடிப்பு படத்திற்கு பெரும் பலத்தைக் கொடுக்கிறது.
பிளஸ்: இவர்களுடன் தேவதர்ஷினி, தீபக், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் படம் முழுவதும் வருகின்றனர். நகைச்சுவையை ஆங்காங்கே முயற்சித்து இருந்தாலும், அவை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சூனியக்காரி பேயாக நடித்துள்ள தேவதர்ஷினியும் அவரது ட்விஸ்ட்டும் நல்லா ஒர்க்கவுட் ஆகியுள்ளது.
மைனஸ்: நிறத்தை முன்வைத்து அழகைத் தீர்மானிக்கும் உலகில், எது அழகு என்கிற கேள்வியை முன்வைக்கும் கதையை தேர்வு செய்து அதை ஃபேண்டஸி மற்றும் காமெடி கலந்து போரடிக்காமல் கொடுக்க இயக்குநர் ராகவ் மிர்தாத் போட்ட முயற்சி தெளிவாக தெரிந்தாலும், படம் இன்னமும் பெட்டராக வந்திருக்க வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
நீங்க பரிதாபங்கள் டிராவிட் நடிப்புக்கு ரசிகராக இருந்தீங்கன்னா, அவர் ஹீரோவாக நடித்து இந்த வாரம் ஜெயிலர் 2வுடன் தில்லாக ரிலீஸ் ஆகியுள்ள ட்ரோன்ஸ் படம் உங்க ஏரியாவில் ஓடினால் ஒருமுறை பார்த்து விடுங்க.