சவுதி அரேபியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள் தாக்குதல்; மத்திய அரசு கடும் கண்டனம்
புதுடில்லி: சவுதி அரேபியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள் மீதான தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: செங்கடல் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பொதுமக்கள் மற்றும் பொருளாதாரச் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, சவுதி அரேபியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள் மீதான தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
புனித நகரமான மெக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிக்குப் பிறகு நாங்கள் வெளியிட்ட அறிக்கையையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்புச் சூழலைக் கெடுக்கின்றன. அவை பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கின்றன, சீர்குலைக்கின்றன; கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. பல்வேறு காரணங்களுக்காக, இது எங்களுக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம். அரபிக் கடலில் இந்தியக் கடற்படைக் கப்பலுக்கும் பாகிஸ்தான் கப்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், பாகிஸ்தான் வெளியிட்ட பதிலில் உள்ள குற்றச்சாட்டுகளையும் மறைமுகக் கருத்துகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இச்சம்பவத்தால் 'ஐஎன்எஸ் கொல்கத்தா' கப்பலுக்குப் பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை; அது தொடர்ந்து கடலிலேயே பணியில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்ய மாலுமிகளின் நலன் குறித்துக் கூறவேண்டுமென்றால், குறிப்பிட்ட அந்த எண்ணெய் டேங்கர் கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் அறிவோம்; மேலும் இங்குள்ள ரஷ்யத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஒடிசா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே அந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யக் கப்பல் குழுவினரைத் தாயகம் திரும்ப அனுப்புவதைப் பொறுத்தவரை, அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.கச்சா எண்ணெய் கொள்முதல் என்பது தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். 140 கோடி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளோம். பல்வேறு வழிகளில் நாங்கள் எரிப்பொருட்களை நாங்கள் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறோம். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.