📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 11:05 AM

சட்டத்துறை பணியில் தொடரும் சவால்கள்: அமைச்சர் சண்முகம்

சட்டத்துறை பணியில் தொடரும் சவால்கள்: அமைச்சர் சண்முகம்

சட்டத்துறையிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மிதமாக இருப்பதாகவும் அத்துறையில் வேலை செய்வோரின் எண்ணிக்கையின் வளர்ச்சி நிலையாக இருப்பதாகவும் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

இருந்தபோதும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைக் கருத இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்களது நான்காண்டு சட்டத்துறைக் கல்வியைத் தொடங்குவதன் அடையாளமாகச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் உரையாற்றிய உள்துறை அமைச்சருமான திரு சண்முகம், வழக்கறிஞர் ஒருவர் தம் பணியில் எதிர்நோக்கும் சவால்களையும் வாய்ப்புகளையும் புதிய மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடந்த நிகழ்ச்சியில் அமைச்சரின் சிறப்புரையுடன் புதிய மாணவர்களின் அறிமுக வார நினைவுகளை மீட்டெடுக்கும் பல்கலைக்கழக அறிமுக நிகழ்ச்சிக் காணொளிப் படைப்பு, மாணவர்களின் பல்கலைக்கழக அறிமுக நிகழ்ச்சி நினைவூட்டுக் குறிப்புகளைக் கொண்ட காலப்பேழையை அமைச்சரும் பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் ஆண்ட்ரூ சிமெஸ்டரும் முத்திரையிட்ட நடவடிக்கை, இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இருவரது இசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றன.

புக்கிட் தீமாவில் அமைந்துள்ள பழைய சட்டத்துறை வளாகத்தையும் கென்ட் ரிட்ஜ்ஜில் அமைந்துள்ள தற்போதைய வளாகத்தையும் இணைத்து ஓவியப்படைப்பு ஒன்று அமைச்சருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

“இது போன்ற நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிக்குரியவை, எதிர்காலத்தை நோக்கியவை, கொண்டாடப்பட வேண்டியவை. ஆனால், சிங்கப்பூரில் நாம் பதற்ற நிலையை ஓர் அழகிய கலை வடிவமாக மாற்றியுள்ளோம். குறிப்பாக, அரசாங்க அளவில், பயந்தவர்கள், பதற்ற நிலையில் தழைப்பவர்கள் ஆகியோரே சிறந்து விளங்க முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது,” என்றார் அவர்.

சட்டத் தொழிலிலிருந்து பிற்காலத்தில் விலகிவிடும் வழக்கறிஞர்கள்

அண்மையில் வழக்கறிஞர் சங்கம் வெளியிட்ட ஆய்வு ஒன்றைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சட்டத் துறையை விட்டு வழக்கறிஞர்கள் விலகுவதற்கான காரணங்களை விளக்கினார்.

2015 முதல் 2024 வரையிலான தரவுகளின்படி, 5 ஆண்டுகள் கழித்து 60 விழுக்காட்டு வழக்கறிஞர்களும், 10 ஆண்டுகள் கழித்து 40 விழுக்காட்டு வழக்கறிஞர்களும் மட்டுமே இத்துறையில் தொடர்கின்றனர். பலர் பெருநிறுவனங்கள், சொந்தத் தொழில், அல்லது தங்களுக்குப் பிடித்த வேறு துறைகளுக்கு மாறுகின்றனர் என்பதைத் தரவுகளுடன் அமைச்சர் எடுத்துரைத்தார். “சில சட்ட நிறுவனங்களில் நிலவும் எதிர்மறையான பணிச்சூழல் குறித்து ஆழ்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன; இது குறித்து வழக்கறிஞர் சங்கத்தின் பணிக்குழு ஆராய்ந்து வருகிறது. வேறு சில வழக்கறிஞர்களோ, சட்டத் துறையில் தாம் வளர்த்துக்கொண்ட திறன்கள் பல துறைகளிலும் பயனளிப்பதால் மற்ற துறைகளுக்கு மாற முடிவெடுத்துள்ளனர்,” என்றார் அவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வேலை-வாழ்க்கைச் சமநிலை

ஆனால், அதே வேளையில், “சட்டம் சவால்மிக்க துறைகளில் ஒன்று என்பதற்காக, முறையான வழிகாட்டுதல் இல்லாமை, பயிற்சிக் குறைபாடு, துன்புறுத்தல், அச்சுறுத்தல், வழக்கறிஞர்களை நியாயமற்ற முறையில் நடத்துவது போன்றவற்றை நியாயப்படுத்த முடியாது,” என்றும், சட்டத்துறையில் முறையான நடத்தை அவசியம் என்றும் திரு சண்முகம் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியால் மேம்பட்ட சட்டத் துறை

உலக அளவில் சட்டத் துறைகளை ஒப்பிடும்போது, சிங்கப்பூர்க் கொடி உயரப் பறப்பதற்கான காரணம், அரசின் தொலைநோக்குப் பொருளியல் கொள்கைகளும், சிங்கப்பூரர்களுக்குச் சட்டத்தின் மீதுள்ள மதிப்பும்தான் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தென்கொரியா போன்ற பெரிய நாடுகளுக்கிடையில், சிங்கப்பூரின் மக்கள் தொகைக்கு ஏற்பச் சட்டத் துறை மிகவும் வலிமையாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

“நாம் தொடர்ந்து போட்டிதன்மையுடன் முன்னேற வேண்டும். நாம் முன்னேறுகையில் பலரும் நம்மை எட்டிப் பிடிக்கவும் கடந்து செல்லவும் முயல்வர். நாம் தொடர்ந்து சிறந்து விளங்கவில்லையெனில், அவர்களது முயற்சிகள் வெற்றியடையும்,” என்றார் திரு சண்முகம்.

பிற நாடுகளைவிடச் சிங்கப்பூர் ஒரு படி மேல் சிறந்து விளங்கவேண்டுமென்ற விருப்பம் 19 வயது அறிவழகன் ஷர்மதாவிற்குச் சட்டக் கல்வியில் சிறந்து விளங்கும் முக்கியத்துவத்தை உணரச்செய்தது.

சமூகச் சேவை ஆற்றியதன் மூலம் கிடைத்த அனுபவங்களால் சட்டத் துறையில் ஆர்வம் காட்டிய இவர், “சுற்றி ஏற்படும் மாற்றங்களுடனும் அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துடனும் ஒன்றி இருப்பது மிகவும் முக்கியம்,” என்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசியப் பல்கலைக்கழகச் சட்டத்துறை மாணவர் மன்றத் துணைத் தலைவரான 20 வயது குவன் சோங், சட்டத்துறைத் தலைவர் ஆண்ட்ரூ சிமெஸ்டர் இருவரும் வழங்கும் ஆதரவிற்கு ஷர்மதா நன்றி தெரிவித்தார்.