தொடரும் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய கேளம்பாக்கம், திருப்போரூர்: போக்குவரத்து சிக்னல்களும் முடங்கின
தொடரும் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய கேளம்பாக்கம், திருப்போரூர்: போக்குவரத்து சிக்னல்களும் முடங்கின
திருப்போரூர்: தொடரும் மின்வெட்டு காரணமாக கேளம்பாக்கம், திருப்போரூர் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதில் போக்குவரத்து சிக்னல்களும் முடங்கியுள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி வரை ஓ.எம்.ஆர். சாலை உள்ளது. இந்த சாலையில் 80க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மருத்துவக் கல்லூரிகள், 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக தினமும் பகலில் 2 மணி நேரமும், மாலை நேரங்களிலும் தொடர்ச்சியாக மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
இந்த மின் தடை நேரம் குறித்து முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படுவது இல்லை. ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பெரிய அளவிலான ஷாப்பிங் மால்கள், கடைகளில் சிலவற்றில் ஜெனரேட்டர் இருப்பதால் அவர்கள் சமாளித்து விடுகின்றனர். சிறிய வணிக வளாகங்களில் மின்சாரத்தை நம்பியே இருப்பதால் இரவு நேரங்களில் இருட்டில் சிக்கி தவிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளை பொருத்தவரை 10 முதல் 20 வீடுகள் வரை உள்ளவற்றில் சிறிய ஜெனரேட்டர் மூலம் சில மணி நேரங்களுக்கு மின் வசதி கிடைத்து விடுகிறது. மாம்பாக்கம், படூர், ஏகாட்டூர் பகுதிகளில் ஒரே குடியிருப்பில் 1,500 வீடுகளுக்கு மேல் இருப்பதால் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் சமாளிக்க முடியாத நிலை ஏற்படுவதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எப்போதும் சாலையோரக் கடைகள், சாலையில் நடுவே உள்ள மின் விளக்குகள் என ஜொலிக்கும் ஓ.எம்.ஆர். சாலை தற்போது இருளடைந்து காணப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் மின் தடை காரணமாக போக்குவரத்து சிக்னல்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. போக்குவரத்து போலீசார் தங்களிடம் உள்ள டார்ச் லைட், ஓளியூட்டும் சோலார் விளக்குகள் மூலம் போக்குவரத்தை சரி செய்யும் அவல நிலை உள்ளது. எனவே, நாவலூர், படூர், ஏகாட்டூர், கேளம்பாக்கம், மாம்பாக்கம், புதுப்பாக்கம், தையூர், திருப்போரூர் பகுதிகளில் நிலவும் தொடர் மின் வெட்டை உடனடியாக சரி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருமண மண்டபங்களால் செயற்கையான மின்வெட்டு
திருப்போரூர் பகுதியில் நான்கு மாடவீதிகளிலும், ஓ.எம்.ஆர். சாலையிலும் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான திருமண மண்டபங்கள் தனியாக டிரான்ஸ்பார்மர்களை பெற்று மின் இணைப்பு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சில திருமண மண்டபங்கள் டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு பெறாமல் வீட்டு இணைப்புகளில் இருந்து நேரடியாக மின் இணைப்பு பெற்று பயன்படுத்துகின்றனர்.
ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறும்போது அதில் பயன்படுத்தப்படும் ஏ.சி. இயந்திரங்கள், அலங்கார விளக்குகள், இசைக்கச்சேரி பயன்பாட்டு பொருட்கள் ஆகியவற்றால் கூடுதல் மின்சார தேவை ஏற்படுகிறது. அப்போது மின் அழுத்தம் ஏற்பட்டு பூமியில் புதைக்கப்பட்ட கேபிள்கள் வெடித்து சிதறுகின்றன. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டு இரவு நேரங்களில் மின் ஊழியர்கள் சிரமத்துடன் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, தனி டிரான்ஸ்பார்மர் பெறாத திருமண மண்டபங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.