“சமயங்களுக்கு இடையிலான உரையாடல் அமைதிக்கான பாதை”
“சமயங்களுக்கு இடையிலான உரையாடல் அமைதிக்கான பாதை” – திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
செப்டம்பர் 27, ஞாயிறன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பிரான்சுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக மெட்ஸ் – “Robert Schuman” மாநாட்டு மையத்தில் பல்வேறு சமயங்களைச் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை அவர்கள் ஆற்றிய உரை:
அன்புச் சகோதரர் சகோதரிகளே,
எல்லைகளும் பல்வேறு சந்திப்புகளும் நிறைந்த மெட்ஸ் நகரில், இராபர்ட் சூமான் மையத்தில் உங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் ஆழ்ந்த ஆன்மிகப் பொறுப்புணர்வையும் அளிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான இராபர்ட் சூமான், பழைய பிரிவுகளை நம்பிக்கையின் பாலங்களாக மாற்றி, பல்வகைமையில் ஒற்றுமையை உருவாக்குவதற்குப் பாடுபட்டார்.
அவரது முன்மாதிரியைப் பின்பற்றி, எல்லைகளைக் கடந்து ஒருவரையொருவர் சந்திக்கவும், நட்பை வளர்க்கவும், அமைதியைத் தேடவும் முடியும் என்பதற்கு நாம் சாட்சிகளாக விளங்க வேண்டும்.
உரையாடல் நமது அடையாளத்தைப் பலவீனப்படுத்துவதில்லை. மாறாக, பிறரின் வேறுபாடுகளுக்கு நம்மைத் திறந்து வைத்து, நமது நம்பிக்கையை உண்மையுடனும் எளிமையுடனும் வெளிப்படுத்த உதவுகிறது. உண்மையான உரையாடல் நட்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. பிறரின் வேறுபாட்டை அச்சுறுத்தலாக அல்ல, ஒரு வாய்ப்பாகக் காண அது நம்மை அழைக்கிறது.
வன்முறையையோ அடக்குமுறையையோ நியாயப்படுத்துவதற்காக இறைவனின் பெயரைப் பயன்படுத்துவது, அவரது திருப்பெயரை இழிவுபடுத்துவதாகும். மனித மாண்பைக் குலைக்கும் எந்தச் செயலுக்கும் இறைவனின் பெயரில் நியாயம் கற்பிக்க முடியாது. எனவே, நமது சமய மரபுகள் அனைத்தும் இதயங்களிலும் வார்த்தைகளிலும் வன்முறையை அகற்றி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கருவிகளாகத் திகழ வேண்டும்.
மேலும், சமயங்கள் உயிரைப் பாதுகாத்து, அதனைப் பேணி, துணைநின்று பணிபுரிவதற்கு அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, மிகவும் நலிவுற்றவர்களுக்கும் பாதுகாப்பற்றவர்களுக்கும் அன்புடன் அருகில் இருப்பதே அவற்றின் பணியாகும். ஒரு நாகரிகத்தின் மகத்துவம் அதன் பொருளாதார சாதனைகளால் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் அது எவ்வாறு பாதுகாத்து நிலைநிறுத்துகிறது என்பதிலேயே வெளிப்படுகிறது.
குறிப்பாக, இளைஞர்களுக்கு நம்பகமான வழிகாட்டுதல்களை வழங்கி, ஒவ்வொருவரின் மாண்பையும் மதிக்கும் சமூகத்தை உருவாக்க நாம் உதவுவோம்.
இறைவனின் பிள்ளைகளாகவும் ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகளாகவும் வாழ இறைவன் நமக்குக் கற்றுத்தருவாராக. நாம் அமைதியை உருவாக்குபவர்களாகவும், உலகில் தொடர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கைக்குச் சாட்சிகளாகவும் விளங்குவோமாக.