📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 28, 2026 06:03 PM

$100,000 இழப்பீடு: ஃபேஸ்புக் பதிவில் இழிவுபடுத்தியவருக்கு எதிராகத் தீர்ப்பு

$100,000 இழப்பீடு: ஃபேஸ்புக் பதிவில் இழிவுபடுத்தியவருக்கு எதிராகத் தீர்ப்பு

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள பெலேவூட்ஸ் கூட்டுரிமை குடியிருப்பின் நிர்வாக முகவரை நிபுணத்துவமற்றவர் மற்றும் கோமாளி என இணையத்தில் பதிவிட்ட அக்கூட்டுரிமை குடியிருப்பு மன்றத்தின் தலைவர் $100,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுரிமைக் குடியிருப்பின் ஐந்தாவது நிர்வாக மன்றத்தின் தலைவராக டான் எங் ஹுவாட் பதவி வகித்தார். பெலேவூட்ஸ் கூட்டுரிமைக் குடியிருப்பின் நிர்வாக முகவராக சிடபிள்யூஎல் ஃபெசிலிட்டிஸ் மேனேஜ்மெண்ட் 2020ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டது.

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டெரிக் லிட் வாய் சோய். அந்நிறுவனத்தின் சேவை ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுற்றது. இதனிடையே, பெலேவூட்ஸ் கூட்டுரிமைக் குடியிருப்பின் ஆறாவது ஆண்டுக் பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக, தற்போதைய நிர்வாக முகவரை நீக்கிவிட்டுப் புதிய முகவரை நியமிக்க டான் ஆதரவு திரட்டினார். சிடபிள்யூஎல் ஃபெசிலிட்டிஸ் மேனேஜ்மெண்ட்டின் சேவை ஒப்பந்தம் நிறைவுபெறுவதற்கு முன்பு இது நடந்தது.

ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்ட ‘ஹோம் @ பெலேவூட்ஸ்’ பேஸ்புக் பக்கத்தில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவர் தொடர்ச்சியாகப் பதிவுகளை வெளியிட்டார். அவற்றில், சிடபிள்யூஎல் நிறுவனத்தையும் அதன் இயக்குநரையும் இழிவுபடுத்தி பதிவிட்டார்.

மேலும், குடியிருப்புவாசிகளுக்கும் கட்டட, கட்டுமான ஆணையத்துக்கும் அனுப்பிய மின்னஞ்சல்களிலும் இத்தகைய அவதூறுகளைப் பரப்பியிருந்தார்.

தங்களை நாணயமற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், நிபுணத்துவமற்றவர்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் போலச் சித்திரித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, சிடபிள்யூஎல் நிறுவனத்தினரும் அதன் இயக்குநர் லிட்டும் டானுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சியா கொக் குன், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று தீர்ப்பளித்தார். டானின் பதிவுகள் அவதூறானவைதான் என்று நீதிபதி உறுதிப்படுத்தினார். சிடபிள்யூஎல் நிறுவனம் மற்றும் இயக்குநர் லிட் ஆகிய இருவருக்கும் தலா $40,000 பொது இழப்பீடாகவும் தலா $10,000 கூடுதல் இழப்பீடாகவும் மொத்தம் $100,000 இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு டானுக்கு உத்தரவிடப்பட்டது.