சிங்கப்பூரின் அணுசக்தி புரிதல்: நியூக்ளியஸ் அமைப்பின் பங்கு
பொதுமக்கள் அணுசக்தி பற்றி மேலும் புரிந்துகொள்ள உதவும் வகையில் புதிய அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அணுசக்திப் பயன்பாடு பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்ட ஒரு விவகாரமாக இருக்கக்கூடிய சூழலில், தூய்மையான எரிசக்தி மூலமான அந்த அணுசக்தியைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்று சிங்கப்பூர் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்ட ‘நியூக்ளியஸ்’ (NUCLEUS - Nuclear Learning & Understanding Society) அமைப்பின் தலைவரான மேத்யூ சியூ, அணுசக்தி என்பது சமுதாயத்தில் விவாதத்திற்குரிய ஒரு விவகாரமாக விளங்குவதோடு, இங்கு இதுகுறித்த பொதுவான அறிவாற்றலிலும் விழிப்புணர்விலும் பெரிய இடைவெளி நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
“குறிப்பாக சிங்கப்பூரைப் பொறுத்தவரை, அணுசக்தி என்பது ஓர் உணர்வுபூர்வமான விவகாரமாகும். பலருக்கும் அணுசக்தி என்ற யோசனை பிடிக்கும்; ஆனால், அது தங்களுக்கு அருகிலேயே அமைக்கப்படும் என்று கூறும்போது, திடீரென அவர்களின் பதில்களில் தயக்கம் ஏற்படுகிறது,” என்று அவர் கூறினார்.
அணுக்கழிவு அல்லது கதிர்வீச்சுக் கழிவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பெரும்பாலும் பலரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய விவகாரமாகும் என்று மேசசூசட்ஸ் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) பல்கலைக்கழகத்தில் அணு அறிவியல் மற்றும் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ஆலோசகரான சியூ கூறினார்.
அணுக்கழிவுகளை நிர்வகிப்பது கடினம் என்றும் அதனால் மனிதர்களுக்கு அதிக கதிர்வீச்சு அபாயம் ஏற்படக்கூடும் என்றும் சிலர் கொண்டுள்ள தவறான எண்ணத்திற்கு மாறாக, கதிர்வீச்சு மனிதர்களையும் சுற்றுப்புறத்தையும் பாதிக்காதவாறு சேமிக்கச் சரியான வழிமுறைகள் இருப்பதாக சியூ தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூர் அரசாங்கமும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் இணைந்து 2023இல் நடத்திய ஆய்வின்படி, சிங்கப்பூர் அணுசக்தியைப் பயன்படுத்த முடிவுசெய்தால், அணுக்கழிவுகளைப் பூமிக்கு அடியில் ஆழமாகச் சேமித்து வைப்பதில் பெரிய தொழில்நுட்பச் சவால்கள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
இருப்பினும், அந்த முடிவு நேரடிக் கள ஆய்வுகளை உள்ளடக்காத ஒரு கணினிவழி ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டதால், அதைப் பற்றி விரிவான மதிப்பீட்டைச் செய்ய எதிர்காலத்தில் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கருத்தரங்குகள், பயிலரங்குகள், தொடர்புகளை விரிவுபடுத்தும் கூட்டங்கள், பள்ளிகளில் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைப் பொதுமக்களுக்காக நடத்த ‘நியூக்ளியஸ்’ அமைப்பு நோக்கம் கொண்டுள்ளது.