📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 23, 2026 11:00 AM

சிங்கப்பூரின் அமைதியையும் பாதுகாப்பையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது: பிரதமர் வோங், சிங்க‌ப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் அமைதியையும் பாதுகாப்பையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது: பிரதமர் வோங், சிங்க‌ப்பூர் செய்திகள்

எந்தவொரு பாதுகாப்புக் கட்டமைப்பாலும் 100 விழுக்காட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்றும் அதனால் சிங்கப்பூரின் பாதுகாப்பையும் அமைதியையும் சிங்கப்பூரர்கள் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

நமது தெம்பனிஸ் நடுவத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி (புதன்கிழமை) ‘நமது சாதாரண நாள்கள் போற்றுதலுக்குரியவை’ என்ற கருப்பொருளுடன் நடந்தேறிய எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அவர் பேசினார்.

சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திரு.எட்வின் டோங்கும் இரண்டாம் உள்துறை, வெளியுறவு அமைச்சர் சிம் ஆனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

“அபாயகரமான, அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய நபர்களையும் அவர்களது திட்டங்களையும் தடுக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன.

ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களைத் தடுக்க முடியுமா என்ற கேள்வியும் நிலவுகிறது,” என்று பிரதமர் கூறினார்.

சிங்கப்பூரர்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பாதுகாப்பு அவர்களுக்கு இயல்பானதாகத் தோன்றினாலும் பிற உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் அது அபூர்வமானது என்று அவர் குறிப்பிட்டார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு எஸ்ஜி பாதுகாப்புத் திட்டம் மக்களிடையே அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒருவேளை அத்தகைய சம்பவங்கள் நடந்தால் அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டுவருவது என்பதைக் கற்பிக்கவும் தொடங்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார். அத்திட்டம் 10ஆம் ஆண்டு நிறைவில் அதன் குறிக்கோள்களை எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் நிலையில் அவற்றைத் தடுக்கக் கூடுதல் முயற்சிகள் அவசியமாகின்றன என்று திரு.வோங் சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வெவ்வேறு வட்டாரங்கள், பள்ளிகள், வேலையிடங்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு இயக்கங்கள் அதிகரிக்கப்படும்.

“மேலும் அதிகமான தொண்டூழியர்களைச் சுற்றியுள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊக்குவிப்போம்,” என்றார் அவர்.

“நாம் நமது பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்துவதும் அதை நிலைநாட்டுவதும் முக்கியம்,” என்று திருவாட்டி சிம் ஆன் கூறினார்.

எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்தின் இயக்குநர் மத்தாயஸ் சியா மக்களிடையே அத்திட்டத்தை ஆக்ககரமான முறையில் கொண்டுசேர்க்கத் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

சிறுவர்களைச் சென்றடைய கதைப்புத்தகங்கள், மின்னிலக்க முயற்சிகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்படுமென அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மக்கள் ஆற்றக்கூடிய வெவ்வேறு பணிகளான உயிர்காப்பாளர், தகவல்களை உறுதிசெய்பவர், உண்மையான நண்பர், பாதுகாவலர், ஒருங்கிணைப்பாளர், எச்சரிப்பவர் ஆகியவற்றைச் சித்திரிக்கும் வண்ணம் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பலவகையான சுவாரசிய நடவடிக்கைகளுடன் எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்தின் கூறுகளைப் பறைசாற்றும் வகையில் இரண்டு கேலிச்சித்திரப் படங்களும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

கண்காட்சி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நமது தெம்பனிஸ் நடுவத்தில் இடம்பெறும்.