சிங்கப்பூர் காற்றின் தரம் மோசமடைந்தது
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்தது. மத்திய வட்டாரத்தைத் தொடர்ந்து, தீவின் கிழக்கு, மேற்குப் பகுதிகளின் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு அளவுகளும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டின.
காலை 9.45 மணி நிலவரப்படி, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு அளவுகள் மத்திய வட்டாரத்தில் 130ஆகவும், கிழக்கில் 117 ஆகவும், மேற்கில் 106ஆகவும் இருந்தன.
வடக்கு (90), தெற்கு (96) வட்டாரங்களின் அளவுகள் மிதமான வரம்பிலேயே நீடித்தன.
கிழக்கு வட்டாரம் நள்ளிரவில் ஆரோக்கியமற்ற நிலையை (103) எட்டியது; அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேற்குப் பகுதியும் (102) அந்த நிலையை அடைந்தது.
24 மணிநேரக் குறியீடு 101க்கும் 200க்கும் இடைப்பட்டிருந்தால் காற்றின்தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் டெக்கத்லோன் முதன்முறையாக ஏற்பாடு செய்த கிப்ருன் ஓட்டப்பந்தயம் மாற்றியமைக்கப்பட்டது.
21.1 கிலோமீட்டர் அரை மாரத்தான் போட்டி 10 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது; பிற பிரிவுகளான 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், சிறுவர்களுக்கான ஓட்டம் (670 மீட்டர்) ஆகியவற்றின் தொலைவு மாற்றமின்றி அப்படியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.